நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘ஜப்பான்’ படத்தின் இன்றோ வீடியோ இன்று வெளிவந்துள்ள நிலையில், முற்றிலும் வித்யாசமான முயற்சி என நடிகர் சூர்யா படக்குழுவிற்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. முதல் படமான பருத்திவீரனில் ஆரம்பித்து சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் வரை தனது படங்களில் வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களை ஏற்று அவரது ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்தாண்டு மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து தற்போது குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றிபெற்ற இயக்குனரான ராஜு முருகனின் இயக்கத்தில், ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. கார்த்தியுடன் அனு இமானுவேல், இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கார்த்தி தனது 25வது படமான ஜப்பான் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தினை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நடிகர் கார்த்தி இன்று தனது 46-வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் , அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஜப்பான்’ படத்தின் இன்றோ வீடியோவை வெளியிட்டு, ரிலீஸ் தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஜப்பான் படத்தின் இன்றோ காட்சியை பார்த்த கார்த்தியின் அண்ணனும், நடிகருமான சூர்யா படக்குழுவினரை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஜப்பான் மேட் இன் இந்தியா… ஜஸ்ட் லவ் டீசர்.. முற்றிலும் வித்தியாசமான முயற்சி தம்பி என கார்த்தியை வாழ்த்தியுள்ளதோடு, அணிக்கு நல்ல அதிர்ஷ்டம் என்று கூறி படம் வெற்றியடைய தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா