ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெறவில்லை.
கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட இருந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 90 சட்டமன்ற இடங்களில் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வென்றது. அங்கு ஆட்சி அமைக்க 46 எம்.எல்.ஏக்கள் தேவை என்கிற போது 48 எம்எல்ஏக்கள் ஆதரவு தேசிய மாநாட்டு கட்சிக்கு கிடைத்தது. இதைத்தொடர்ந்து அங்கே புதிய அரசு அமைக்கும் பணிகளை தேசிய மாநாடு கட்சி முடுக்கி விட்டு உள்ளது. அதன்படி கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த 10ம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா நடத்திய இந்த கூட்டத்தில் அனைத்து புதிய எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவராக முதலமைச்சராக தேசிய மாநாடு கட்சியின் துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான உமர் அப்துல்லா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவருக்கு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் ஆதரவு கொடுத்து உள்ளனர். இதனால் அக்கட்சியின் பலம் 46 ஆக அதிகரித்து உள்ளது. இதனால் காங்கிரஸ் தயவு இல்லாமலே அந்த கட்சிக்கு ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைத்தது.
இதையடுத்து கடந்த 11ம் தேதி துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்த உமர் அப்துல்லா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதன்படி உமர் அப்துல்லா இன்று ஜம்மு காஷ்மீர் முதல்வராக பதவியேற்று கொண்டார். இன்று காலை 11.30 மணியளவில் உமர் அப்துல்லாவுக்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சரத் யாதவ், அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவ், திமுக சார்பாக கனிமொழி எம்பி, சிவசேனா (உத்தவ்) உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆனால் காங்கிரஸின் நிலைபாடு இதுவரை இறுதி செய்யப்படவில்லை. அவர்களுக்கு அமைச்சரவையில் பதவிகள் கொடுக்கப்படுமா என்பது இறுதி செய்யப்பட்டவில்லை என கூறப்படுகிறது.







