மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான முன் பதிவு டோக்கன் இன்று வழங்கப்பட்டது.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 15,16 ஆம் தேதிகளில் அரசு வழிகாட்டுதல்படி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டில் களமிறங்கும் காளைகளுக்கான முன்பதிவு டோக்கன் பெறுவதற்காக காளை உரிமையாளர்கள் ஏராளமானோர் நள்ளிரவு முதலே அலங்காநல்லூர், பாலமேட்டில் குவிந்தனர். அலங்காநல்லூரில் காளை உரிமையாளர்கள் தலா 100 பேர் வீதம் அறைகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். காலை 8.30 மணிக்கு டோக்கன் வழங்க ஆரம்பித்த நிலையில் திடீரென அறைகளின் கதவை திறந்து கொண்டு கூட்டமாக, ஒரே நேரத்தில் திரண்டு வந்து குவிந்ததால் போலீசாருக்கும் காளை உரிமையாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது ஒருபுறமிருக்க பாலமேட்டில் மாடுபிடி வீரர்களுக்கான கொரோனா பரிசோதனையானது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று தொடங்கியது. இதில் ஆதார் மற்றும் ஜல்லிக்கட்டு முன்பதிவு டோக்கனை கொண்டு வரும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதேபோல் மதுரை மாவட்டம் அவனியாபுரத்திலும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான டோக்கன் வழங்கப்பட்டது. இதில் டோக்கன் பெறுவதற்காக பெண்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். காளைகளின் உரிமையாளர்களுக்கும், உதவியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகிறது.