மாவட்ட ஆட்சியரின் முழுமையான ஆய்வுக்கு பின்னரே ஜல்லிக்கட்டிற்கு அனுமதி அளிக்கபடுவதால் அதனை தாங்கள் ஆதரிப்பதாக மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் எழுந்த கிளர்ச்சியையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் வகையில் மிருகவதை தடுப்புச்சட்டத்தில் அப்போதைய அதிமுக அரசு திருத்தம் கொண்டு வந்தது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி பல்வேறு வாதங்களை எடுத்துவைத்தார். ஜல்லிக்கட்டு தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாட்டோடு ஒன்றிணைந்தது என தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது. ஜல்லிகட்டு விதிமுறைகள் அனைத்தும் மிகத்தெளிவாக உள்ளதாகவும் அதில் எந்த சமரசமும் செய்யப்படுவதில்லை எனவும் தமிழக அரசு தெரிவித்தது. அப்போது ஜல்லிக்கட்டு பண்பாடு, கலாச்சாரத்தோடு இணைந்தது எனில் அது தொடர்பான எந்த ஆய்வு அறிக்கைகளையும் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யவில்லையே? என விலங்கின ஆர்வலர்கள் தரப்பு வாதிட்டது. இதற்கு தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டபோது, ஆய்வுகள் தொடர்பான ஆவணங்களை சமர்பிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
சங்க காலத்து தமிழ் இலக்கியங்களில் ஏறுதழுவுதல் என்ற பெயரில் ஜல்லிக்கட்டின் முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. ஜல்லிக்கட்டு தமிழக பண்பாடு, கலாச்சாரத்தோடு இணைந்த ஒன்று என்றும் எனவே அதனை வெறுமனே கடந்து போக முடியாது எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தோடு தொடர்படையது என்பதை பழங்கால குகை ஓவியங்கள், சுடுமண் சிற்பங்கள் உறுதிபடுத்துவதாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
காளைகளின் ஓட்டம் தொடர்பான பீட்டா அமைப்பின் வாதத்தையும் தமிழ்நாடு அரசு மறுத்து வாதிட்டது. 5000 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டில் காளைகள் ஈடுபடுத்தப்படுவதாக சுட்டிக்காட்டிய தமிழ்நாடு அரசு, அவற்றின் ஓட்டத்தை எவரும் முழுமையாக தடுத்து நிறுத்தியது கிடையாது, அந்த அளவுக்கு அதன் வேகம் இருக்கும் என தெரிவித்தது. 5000 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டில் காளைகள் ஈடுபடுத்தப்படும் நிலையில், திடீரென குதிரைகள் போன்று காளைகள் ஓடும் விலங்கு அல்ல, எனவே அதனை களத்தில் ஓட விடுவது துன்புறுத்தல் எனக் கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்வது ? என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு தாங்கள் ஆதரவாக இருக்கிறோம் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஏனெனில் அந்த சட்டத்தில், பல்வேறு கட்டுப்பாடுகள், விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியரின் முழு ஆய்வுக்கு பிறகு தான் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் வாதிட்ட மத்திய அரசு தரப்பு,
சட்ட விதிகளை மீறுபவர்களுக்கு சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.









