ஜல்லிக்கட்டு காளைகளை தாங்கள் குடும்ப உறுப்பினர் போல் பாவிப்பதாக உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் வாதிட்டனர். குடும்ப உறுப்பினரை எப்படி துன்புறுத்துவோம்? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட சட்டதிருத்தத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி வாதிட்டார்.
”ஜல்லிக்கட்டு என்பது எங்களது அடிப்படை உரிமை, எங்ளது கலாச்சாரமாகும். இது அத்தியாவசியம், அல்லது அத்தியாவசியமில்லை என்று நீதிமன்றம் எப்படி கூற முடியும்?” என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டு என்பது மனிதர்களின் நன்மைக்கானதாக இருக்க முடியுமா ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, நிச்சயமாக மனிதனின் நன்மைக்கானதுதான் எனக் கூறிய முகுல் ரோத்தஹி, ஏனெனில் கலாச்சாரம் , பண்பாடு என்பது மனிதனின் நன்மைக்கானது தானே எனத் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு போட்டியின்போது மனிதர்கள் உயிரிழக்கின்றனர் என எதிர்தரப்பு குற்றம்சாட்டுகின்றனரே ? என நீதிபகள் கூறியபோது, “எல்லா வேலைகளிலும் உயிரிழப்பு என்பது ஏற்படுகிறது. வாகனம் ஓட்டும்போது விபத்து நிகழ்கிறது , பாலம் உடைந்து உயிரிழப்பு ஏற்படுகிறது இவ்வாறு பல உதாரணங்கள் உள்ளன” என தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழப்பு நடக்கும் நிலையில் அந்த போட்டிகளை அரசு ஊக்குவிக்கிறதே ? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, ”சாலைகளில் 100 கி.மீ வேகத்துக்கு மேல் போகாதீர்கள் என்று அரச கூறுகிறது, இருப்பினும் விபத்து நடக்கிறதே, உயிரிழப்பு நடக்கிறதே” என பதில் அளித்தார். ஜல்லிக்கட்டு நடப்பதற்கு முன்பு காளைகளுக்கு பல்வேறு சோதனைகள் நடத்துகிறீர்கள், அப்படியெனில் விளையாட்டு முடிந்தும் பரிசோதனை செய்ய வேண்டியது தானே ? என நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த முகுல் ரோத்தஹி, ஜல்லிக்கட்டு முடிந்ததும் நிச்சயமாக காளைகளுக்கு பரிசோதனை நடத்துவோம், அதனை நீதிமன்றம் பதிவு செய்து கொள்ளலாம் எனக் கூறினார்.
ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் தரப்பு வாதம்
ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகமுத்து வாதிடும்போது, ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டு அல்ல அது திருவிழா, அது கோயிலோடு தொடர்புடையது ஆகும் எனக் கூறினார்.
ஊரே சேர்ந்து கொண்டாடும் விழா ஜல்லிக்கட்டு விழா என்று கூறிய அவர், ஜல்லிக்கட்டு காளைகளை தங்கள் குடும்ப உறுப்பினர்கள் போல் பாவிக்கிறோம் என்றார். அவ்வாறு இருக்க எப்படி ஒரு குடும்ப உறுப்பினரை துன்புறுத்துவோம் ? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பீட்டா அமைப்பு தரப்பு வாதம்
பீட்டா அமைப்பு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சியாம் திவான் வாதங்களை எடுத்துவைத்தார். ஜல்லிக்கட்டின்போது ஒவ்வொரு ஆண்டும் ஏற்பட்ட மனிதர்கள் உயிர் பலி மற்றும் காளைகள் பலி குறித்த புள்ளி விபரங்கள் உச்சநீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு சார்பில் எடுத்துரைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டின்போது காளைகள் மீது பலர் ஒரே சமயத்தில் தாவுவதாகவும் அப்போது காளைகள் பீதியடைந்து தாக்குவதாகவும் பீட்டா அமைப்பு சார்பில் வாதிடப்பட்டது. எனவே விதிகள் வகுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு கூறுவது கண்துடைப்பு என்றும் விதிகள் எந்த வகையிலும் அமல்படுத்தப்படவில்லை என்றும் பீட்டா அமைப்பு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணையை நாளைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.








