கேரள மாநிலத்தில் ஹரிதா கர்மா சேனா என்று பெயரிடப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அமைப்பை சேர்ந்த 11 பெண்கள் சேர்ந்து வாங்கிய லாட்டரிக்கு ரூ.10 கோடி பரிசு கிடைத்துள்ளது.
கேரள மாநிலத்தில் வறுமை ஒழிப்பு மற்றும் பெண்கள் மேம்பாடு சார்ந்து அமல்படுத்தப்பட்டது ஹரிதா கர்மா சேனா திட்டம். இதன் ஒரு பகுதியாக மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பரப்பனங்காடி நகராட்சியில் 11 பெண்கள் ஹரிதா கர்மா சேனாவில் பணியாற்றி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள வீடு தேடி சென்று மக்காத குப்பைகளை சேகரிப்பது தான் இவர்களது பணி.
11 பேரும் வறியவர்கள். அதனால் 11 பேரும் இணைந்து 250 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளனர். தங்களது அதிர்ஷ்டத்தை சோதிக்கும் வகையில் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் வாங்கிய லாட்டரி டிக்கெட் ஜாக்பாட் அடித்துள்ளது. அதன் மூலம் ரூ.10 கோடி வென்றுள்ளனர்.
இவ்வளவு பணத்தை என்ன செய்வீர்கள் என்று இவர்களிடம் கேட்டால், வீடு கட்டுவோம், பிள்ளைகளைப் படிக்க வைப்போம், கடனை அடைப்போம் என்கிறார்கள் ஒருமித்தக் குரலில். இனியும் ஒன்றாகவே இருப்போம். ஒன்றாகவே பணியாற்றுவோம் என மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.







