“அது நான் இல்லை…இது சலீம் 2 இல்லை…” – விஜய் மில்டனுக்கு விஜய்ஆண்டனி விளக்கம்!

மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய அந்த ஒரு நிமிட காட்சி நீக்கப்பட்டதை தொடர்ந்து, விஜய் ஆண்டனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கியவர் விஜய் ஆண்டனி. இவர்…

மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய அந்த ஒரு நிமிட காட்சி நீக்கப்பட்டதை தொடர்ந்து, விஜய் ஆண்டனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கியவர் விஜய் ஆண்டனி. இவர் தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குநர் என பன்முகம் காட்டி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘ரோமியோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த திரைப்படத்தின் வசூல் சிறப்பாகவே அமைந்தது. இதனையடுத்து, விஜய் ஆண்டனி ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார்.

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து தயாரித்தனர். படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களை பெற்றது.

ஆனால் திரைப்படத்தில் 2 நிமிட காட்சிகள் தனது கவனத்திற்கு வராமலேயே சேர்க்கப்பட்டுள்ளது என்றும், சென்சார் சான்றிதழ் பெற்ற பின் இப்படி ஒரு புதிய காட்சியை சேர்த்தனர் என்றும் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருந்தார் விஜய் மில்டன். அதேசமயம் படத்தின் தயாரிப்பாளர் தரப்பிற்கும் விஜய் மில்டனுக்கும் பல நாட்களாக இந்த படம் தொடர்பாக இருந்த கருத்து வேறுபாடு காரணமாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இது போன்ற ஒரு நிமிட காட்சியை உருவாக்கி சேர்த்து இருக்கிறார்கள் என்றே சொல்லப்பட்டது.

இந்த இரு நிமிட காட்சியால் படத்திற்கு வந்த எதிர்மறை விமர்சனம் காரணமாகவும், இதனால் ஏற்பட்ட சலசலப்பு காரணமாகவும் அந்த காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டது. தொடர்ந்து இயக்குநர் விஜய் மில்டன் இந்த காட்சியை நீக்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் எல்லாமே படத்தின் நலம் கருதித்தான் நடந்தது என்றும் மேலும் இந்த பிரச்னையில் தலையிட்டு சமரசம் செய்து வைத்த நடிகர் சரத்குமாருக்கு மிகவும் நன்றி என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், விஜய் ஆண்டனி தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “மழை பிடிக்காத மனிதன் படத்தின் துவக்கத்தில் வரும் இரண்டு நிமிடக்காட்சியை, தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இனணத்து உள்ளதாக, என் நண்பர், படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்திருந்தார். அது நான் இல்லை. இது சலீம் 2 இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.