ஆதித்யா L1 வெற்றிகரமாக விண்ணில் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட தருணம் இந்தியாவுக்கு ஒரு சூரிய ஒளிப் பாய்ச்சல் (சன் ஷைன்) தருணம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் தரை இறங்கி வெற்றிகரமாக ஆய்வை மேற்கொண்டு வரும் நிலையில், சூரியனை பற்றிய ஆய்வில் இஸ்ரோ களமிறங்கியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம், ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இதையடுத்து, சரியான ஒரு மணி நேரம் 12 நிமிடங்களுக்குப் பின், ராக்கெட்டிலிருந்து பிரிந்து, ஆதித்யா விண்கலம், தனது தனித்தப் பயணத்தைத் தொடங்கியது. இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேரில் கலந்துகொண்டு பார்வையிட்டார். இது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் செய்தியாளர்களிடையே தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.
பின்னர் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக விண்ணில் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட இத்தருணம் இந்தியாவுக்கு ஒரு சூரிய ஒளிப் பாய்ச்சல் (சன் ஷைன்) தருணம்” என்று கூறினார். மேலும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்ததோடு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் தனது பாராட்டுகளை சமர்பித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஆதித்யா-1 திட்ட இயக்குநர் நிகர் சாஜி, திட்டத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.







