ஆளுநர் நடத்தும் கல்வி மாநாட்டில் பங்கேற்பது அந்தந்த துணை வேந்தர்களின் தனிப்பட்ட விருப்பம் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாநில கல்விக்கொள்கை குறித்து விவாதக் கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது.
இதில், 19 பல்கலைக்கழக துணைவேந்தர்கள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வர்கள், அரசுப் பொறியியல் கல்லூரி முதல்வர்கள் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, கல்லூரி மாணவர் சேர்க்கை, பாடத்திட்டங்கள், பெருந்தலைவர் காமராஜர் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், வேறு கல்லூரியில் இடம் கிடைத்த மாணவர்களுக்கு, அவர்கள் கட்டிய பணத்தை திரும்ப அளிக்க வேண்டும் என்றும், அதற்கான சுற்றறிக்கை தனியார் கல்லூரிகளுக்கும் விரைவில் அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார்.







