“இலவசங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தீர்மானிக்கக்கூடாது”

இலவசங்கள் குறித்து மக்கள் பிரதிநிதிகளே தீர்மானிக்க வேண்டும்; உச்சநீதிமன்றம் அல்ல என்று குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு தெரிவித்துள்ளார். மறைந்த பாஜக மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி…

இலவசங்கள் குறித்து மக்கள் பிரதிநிதிகளே தீர்மானிக்க வேண்டும்; உச்சநீதிமன்றம் அல்ல என்று குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

மறைந்த பாஜக மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி 2014 முதல் 2019வரை எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘A New India’ என்ற பெயரில் புத்தகமாக நேற்று வெளியிடப்பட்டது.

புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய வெங்கைய்யா நாயுடு,கட்சித் தாவல் தடுப்புச் சட்டம், இலவசங்கள் என பல விவகாரங்கள் நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதாகக் குறிப்பிட்டார்.

சட்ட ரீதியிலான விளக்கத்தைப் பெற நீதிமன்றம் செல்லலாம் ஆனால், கொள்கை முடிவுகள் எடுக்கும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வசம்தான் இருக்க வேண்டும் என வெங்கைய்யா நாயுடு தெரிவித்தார்.

இலவசங்கள் விவகாரத்தைப் பொருத்தவரை, இது உச்சநீதிமன்றத்திற்கு உட்பட்டது கிடையாது என தெரிவித்த வெங்கைய்யா நாயுடு, மக்கள் பிரதிநிதிகள்தான் முடிவெடுக்கும் அதிகாரம் மிக்கவர்கள் என்றும்,  ஏனெனில் அவர்கள்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறினார்.

இலவசங்கள் என்றால் என்ன என்பதை முதலில் வரையறுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள வெங்கைய்யா நாயுடு, மத்திய, மாநில அரசுகளின் நிதி நிலை எவ்வாறு உள்ளது என்பதை மனதில் கொண்டு இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஒரு இலவச திட்டத்தை நிதிநிலை அறிக்கையில் சேர்க்க முடியாது எனும்போதோ, போதுமான நிதி இல்லை எனும்போதோ அது குறித்து ஏன் அறிவிக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இத்தகைய தருணத்தில், பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ள மந்திர வார்த்தைகளான சீ்ர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியவை மிக மிக முக்கியத்துவம் பெறுகின்றன என்றும் வெங்கைய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.