தனது தந்தையின் கதையை படமாக்கும் #MariSelvaraj… ஹீரோ யார் தெரியுமா?

மாரி செல்வராஜின் தந்தை வாழ்க்கையில் நடந்த உண்மைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தின் கார்த்தி நடிக்க உள்ளதாக தயாரிப்பாளர் லக்‌ஷ்மணன் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ’96’ திரைப்படத்தை இயக்கிய பிரேம்குமார்,…

மாரி செல்வராஜின் தந்தை வாழ்க்கையில் நடந்த உண்மைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தின் கார்த்தி நடிக்க உள்ளதாக தயாரிப்பாளர் லக்‌ஷ்மணன் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ’96’ திரைப்படத்தை இயக்கிய பிரேம்குமார், சுமார் 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ‘மெய்யழகன்’ திரைப்படத்தை இயக்கினார். நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்தை 2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் தயாரித்திருந்தனர்.

கடந்த மாதம் 27-ஆம் தேதி திரைக்கு வந்த மெய்யழகன் திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரூ. 40 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஓடிடியில் வெளியாகி, மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, கார்த்தி தற்போது சர்தார் – 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த சூழலில், கார்த்தியை வைத்து படம் எடுக்க உள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள திரைப்படம் தொடர்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பிரின்ஸ் ஃபிக்சர்ஸ் தயாரிப்பாளர் லக்‌ஷ்மணன் கூறியதாவது:

“கடந்த ஆண்டே கார்த்தியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டது. கார்த்தி சுமார் 1 மணி நேரம் கதை கேட்டிருப்பார். கார்த்திக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. மாரி செல்வராஜின் தந்தை வாழ்க்கையில் நடந்த உண்மைக் கதையை மையமாக இந்தக் கதை உருவாக இருக்கிறது. இந்தப்படம் மிகவும் பாதிக்கும் வகையில் இருக்கும்.” இவ்வாறு தயாரிப்பாளர் லக்‌ஷ்மணன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.