தொடக்கமே அரசர் சார்லஸுக்கு சவாலாக அமைகிறதா?

பிரிட்டன் அரசராக பதவியேற்றுள்ள சார்லஸை, அரசராக ஏற்பதா அல்லது பிரிட்டனின் முடியாட்சியிலிருந்து வெளியேற்றுவதா என விரைவில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என பரபரப்பை கிளப்பியுள்ளன கரீபிய நாடுகள். தொடக்கமே சார்லஸுக்கு சவாலாக அமைகிறதா? அது குறித்த…

பிரிட்டன் அரசராக பதவியேற்றுள்ள சார்லஸை, அரசராக ஏற்பதா அல்லது பிரிட்டனின் முடியாட்சியிலிருந்து வெளியேற்றுவதா என விரைவில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என பரபரப்பை கிளப்பியுள்ளன கரீபிய நாடுகள்.

தொடக்கமே சார்லஸுக்கு சவாலாக அமைகிறதா? அது குறித்த செய்தியை பார்க்கலாம்.

70 ஆண்டுகளாக பிரிட்டன் அரசவையின் தலைமைப் பதவியை வகித்த, இரண்டாம் எலிசபெத் ராணி கடந்த வாரம் மறைந்தார். அதையடுத்து ராணியின் மகனும், 70 ஆண்டுகளாக பட்டத்து இளவரசராக வலம் வந்தவருமான மூன்றாம் சார்ல்ஸ், பிரிட்டன் நாட்டின் அரசராக பதவியேற்றார்.

மறைந்த ராணியின் இறுதிச் சடங்குகள் இன்னும் நடைபெறவில்லை. இந்நிலையில் சார்லஸை அரசராக ஏற்பதா, பிரிட்டனின் முடியாட்சியிலிருந்து வெளியேறுவதா என வாக்கெடுப்பு நடத்தப்படும் என ஆன்டிகுவா மற்றும் பார்புடா நாட்டின் பிரதமர் கேஸ்டன் பிரவுனின் அறிவிப்பு சர்வதேச அரசியல் வானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் பிரிட்டன் முடியாட்சியிலிருந்து வெளியேறும் இந்த நடவடிக்கை ‘பகைமையை உருவாக்கும் செயல் அல்ல’ என்றும் கேஸ்டன் பிரவுன் தெளிவுபடுத்தியுள்ளார்.

என்ன நடக்கிறது சர்வதேச அரசியல் என வரலற்றை சற்று பின் நோக்கி பார்ப்போம். எங்கள் முடியாட்சியில் சூரியன் கூட அஸ்தமிப்பதில்லை என ஒரு காலத்தில்,இறுமாப்புடன் சொல்லி வந்தது பிரிட்டன் அரச பரம்பரை. இந்த கூற்று உண்மை தான். உலகின் பெரும்பாலான நாடுகளை, சுமார் மூன்று நூற்றாண்டுகளாக தன் ஆளுகையின் கீழ் கொடுங்லோல் ஆட்சி செய்து வந்தது பிரிட்டன் அரச பரம்பரை . இரண்டாம் உலகப்போருக்கு பின், உலகெங்கும் பெருமளவில் பல நாடுகளில், கிளர்ச்சியும், புரட்சியும் தானாக உருவாகின. இதனையடுத்து இந்தியா உட்பட பல நாடுகள் விடுதலைக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்தன.

இன்னொரு சுவாரஸ்யமாக பிரிட்டன் நாட்டை தவிர, ஆன்டிகுவா மற்றும் பார்புடா, ஆஸ்திரேலியா, பஹாமாஸ், பெலிஸ், கனடா, கிரெனடா, ஜமைக்கா, நியூசிலாந்து, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனாடைன்ஸ், சாலமன் தீவுகள் மற்றும் துவாலு, பப்புவா நியூ கினியா, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயிண்ட் லூசியா, ஆகிய 14 நாடுகள் மக்களாட்சி ஜனநாயகத்தை பின்பற்றினாலும், நாட்டின் அரசமைப்பு தலைவராக இருப்பது பிரிட்டன் அரச குடும்பமே.

ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்பு கூட, இந்த நடுகளில் வாக்கெடுப்பு நடத்தியபோது கூட மன்னராட்சியே வேண்டும் என பிரிட்டன் அரசாட்சிக்கு மக்கள் ஆதரவளித்தனர். எல்லாமே மாற்றத்திற்கு உட்பட்டது தானே. சில ஆண்டுகளாக உலகெங்கும் மெல்ல மெல்ல மாற்றம் கண்டு வருகிறது. தலைமுறையின் சிந்தனை புதிய பரிமாணத்தை நோக்கி செல்கிறது என்றால் மிகையில்லை.

இந்நிலையில் எலிசபெத் ராணியின் மறைவையடுத்து, சார்லஸை அரசராக ஏற்பதா, இல்லை பிரிட்டனின் அரச குடும்பத்தின் ஆட்சியிலிருந்து முழுமையாக வெளியேறி, குடியரசாக மாறுவது குறித்து கருத்தறிய மக்களிடம் பொது வாக்கெடுப்பு மூன்று ஆண்டுகளுக்குள் நடத்தப்படும். மேலும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும், தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்த வாக்கெடுப்பு நடக்கும் என்றார் பிரவுன்.

பிரவுன் வரும் தேர்தலில் அவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இதைப் பற்றி சிந்திக்கக் கூட இல்லை என்று நான் நினைக்கிறேன்,” என ஐடிவி நியூஸ் என்ற செய்தி ஊடகத்திடம் பிரவுன் கூறியுள்ளார்.

பிரவுனின் கட்சி பிரதிநிதிகள் அவையில் மொத்தம் உள்ள 17 இடங்களில் 15 இடங்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பல நாடுகள் முடியாட்சியின் இருப்பை மறுபரிசீலனை செய்கின்றன. குடியரசாக மாறுவது “உண்மையான இறையாண்மை கொண்ட நாடாக மாறுவதற்கான விடுதலை வேட்கையில் உள்ளன எனவும் பிரவுன் கூறியுள்ளார்.

பிரிட்டனின் முடியாட்சியிலிருந்து விலகுவது என்ற ஆன்டிகுவா மற்றும் பார்புடா நாட்டின் பிரதமர் கேஸ்டன் பிரவுனின் அறிவிப்பு, வருங் காலத்தில் நிகழவுள்ள அரசியல் மாற்றங்களுக்கான முதற்படியே இது எனவும் சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆண்டிகுவா நாட்டுக்கு முன்னோடியாக , கடந்த ஆண்டு பார்படாஸ் நாட்டின் நாடாளுமன்றத்தால் அரசின் தலைவர் பதவியில் இருந்து ராணி நீக்கப்பட்டார். அதையடுத்து அந்நாட்டின் முதல் அதிபராக கவர்னர் ஜெனரலாக இருந்த டேம் சாண்ட்ரா மேசன் பதவியேற்றுக் கொண்டார்.

இதனிடையே, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பிரிட்டனிலிருந்து விலகுவது குறித்த வாக்கெடுப்பை ஆஸ்திரேலியாவில் நடத்தாது என்று அந்நாட்டு தெரிவித்துள்ளது.

எலிசபெத் ராணியின் மறைவு ஆஸ்திரேலியாவின் முடியாட்சி குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். இப்போதைய ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீசி குடியரசுக்கு ஆதரவாளர்.

ஆனாலும்,அவர் இப்போது இத்தகைய வாக்கெடுப்பு நடத்துவது குறித்து நிராகரித்தார். இதுகுறித்து ஸ்கை நியூஸ் என்ற ஊடகத்திடம் அவர் பேசுகையில், “தற்போதைய காலகட்டத்தில், அரசமைப்பைப் பற்றிய மிகப் பெரிய கேள்விக்கு இது சரியான நேரம் இல்லை,” என்று கூறினார்.

ஆஸ்திரேலியர்கள் அரச குடும்பத்தின் துக்கத்தில் பங்கெடுக்கிறோம். இது ஆஸ்திரேலியாவிற்கு ராணி அளித்த பங்களிப்புக்கு எங்கள் ஆழ்ந்த மரியாதையும், போற்றுதலையும் தெரிவித்து கொள்கிறோம் எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீசி கூறினார்.

மற்றொரு பிரிட்டன் முடியாட்சி நாடாக உள்ள ஜமைக்காவில், குடியரசாக மாறுவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்துவதே தனது இலக்கு என்று ஆளும் லேபர் கட்சி தெரிவித்துள்ளது.

70 ஆண்டுகள் இளவரசராக இருந்து தன் அன்னை ராணி எலிசபெத்தின் ராஜீய ரீதியிலான பணிக்கு உறுதுணையாக இருந்து அனுபவம் பெற்று, இப்போது அரசராக பதவியேற்றுள்ள சார்லஸ் எப்படி சமாளிப்பார் வரலாறு ஆவலாக எதிர்பர்த்துக் கொண்டிருக்கிறது.

-ரா.தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.