‘லியோ’ திரைப்படத்தின் முதல் பாடலான “நா ரெடி” என்ற பாடலில் விஜயின் அரசியல் வருகையை பிரகடனப்படுத்தும் வகையில் உள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம்வரும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், கதிர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மேலும் மிஷ்கின், சஞ்சய் தத் இருவரும் வில்லன்களாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்கு பிறகு த்ரிஷா நடிக்கிறார். இந்த படத்தின் கேரள மாநில வெளியீட்டு விநியோக உரிமை ரூ.16 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு உரிமம் ரூ.60 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லோகேஷ் – விஜய் கூட்டணியில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்ற “மாஸ்டர்” திரைப்படத்தை தொடர்ந்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிரூத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி ‘லியோ’ திரைப்படத்தின் முதல் பாடலான “நா ரெடி” என்ற பாடல் வெளியாகும் என அறிவித்துள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த பாடலில், “நான் ரெடி தான் வரவா”, “அண்ணன் நான் இறங்கி வரவா”, “சினங்கொண்ட சிங்கத்த சீண்டாதப்பா”, மற்றும் எவன்தடுத்தும் என் ரூட்டு மாறாதப்பா என்ற அரசியல் அதிரடி வசனங்கள் இப்பாடலில் இடம்பெற்றுள்ளது. இது அவரது அரசியல் வருகையை பிரகடனப்படுத்தும் வகையில் உள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.








