முக்கியச் செய்திகள் உலகம் ஆசிரியர் தேர்வு கட்டுரைகள் செய்திகள் விளையாட்டு

மயக்கமா, கலக்கமா, ரோஹித் ஷர்மாவுக்கு குழப்பமா?


நாகராஜன்

கட்டுரையாளர்

இந்திய அணிக்கு நெருக்கடியாக இருப்பது காலநிலையா அல்லது பவுலிங் ஆர்டரா என்ற கேள்வி எழுந்துள்ளது.  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி 20 போட்டியின்  ரீவைண்ட் குறித்த செய்தி தொகுப்பு

மயக்கமா, கலக்கமா மைண்டு ஃபுல்லா குழப்பமா? இது சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் பாடல் என்று பலர் சொன்னாலும், இந்த பாடலின் முதல் வரி என்பது இந்திய அணிக்கும், கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் மிக அற்புதமாக பொருந்தும் எனலாம்!

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 8 வது டி20 உலக கோப்பை தொடர், அடுத்த மாதம் 16 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணிகளும் தங்களை தயார் செய்து வரும் நிலையில் இந்திய அணியும்‌ உலகக்கோப்பை தொடருக்கு ஆஸ்திரேலியா பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக இந்தியாவில் மூன்று டி20 போட்டிகள் கொண்ட இரண்டு தொடர்களை, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு எதிராக விளையாடி வருகிறது.

இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் தொடரின் முதல் டி20 போட்டியில் விளையாடிய இந்திய அணியின் செயல்பாடு, தமிழ்நாட்டின் கிரிக்கெட் கமண்டேட்டர் ஆர் ஜே பாலாஜி சொல்லுவது போல “தட்டு தடுமாறி, திக்கு திசை மாறி சூ சூ மாரி” என்பது போல தான் இருந்தது. ‘இதென்ன புதுசா இருக்கு? இந்தியா பேட்டிங் நல்லாதான பண்ணினாங்க?’ என கேட்பவர்களுக்கு இந்த ஸ்கிரிப்டில் கண்டன்ட் இல்லாவிட்டாலும், பவுலிங் குறித்து கேட்பவர்களுக்கு பாரபட்சம் பாராமல் கேள்விகள் வைக்கப்படும்!

இந்த வருடத்தின் முக்கிய புள்ளியே, இந்திய அணியின் பவுலிங் தான். பொதுவாக தரவரிசையில் இந்திய அணியை விட பின் தங்கியுள்ள அணிகளின் பவுலிங் ஆர்டரை விடவும் 45% சரிவை சந்தித்து இருக்கிறது இந்திய அணியின் பவுலிங் ஆர்டர். ஒரு அணிக்கு அவ்வபோது கை கொடுப்பது, பேட்டிங் ஆர்டராக இருந்தாலும், எப்போதுமே கை கொடுக்க வேண்டியது பவுலிங் ஆர்டர் தான். அந்த விஷயத்தில் ஆப்கானிஸ்தான் கெட்டிக்காரர்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதற்காக இந்திய அணியை ஆப்கானிஸ்தான் உடன் ஒப்பிட முடியாது, ஏனெனில் இந்த வருடத்தில் ஒருசில போட்டிகளில் இந்தியாவின் பவுலிங் என்பது உலக தரத்தில் தனித்துவத்தை நிரூபித்துள்ளது.

இருப்பினும் தற்போதைய விமர்சனத்திற்கான காரணம் இந்திய அணியில் சீரான தன்மையின்மையே!. ஏற்கனவே உலககோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் நிலவி வந்த குழப்பம், பல கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் தற்போதும் கூட டீ கடையில் பெஞ்ச் போட்டு, அரசியல் நிகழ்வுகளை நியாயம் பேசுவது போல முணுமுணுக்க செய்தாலும், உலக கோப்பை தொடருக்கு பக்கபலமாக இந்த அணி செயல்படுமா என்பதை தேர்வு செய்யும் விதமாகவே அமைந்திருக்கிறது இந்தியா – ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர்.

கவனிக்க வைத்த வீரர் பட்டியல்

முதலில் நேற்று இரவு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில், ஜாஸ்பிரித் பும்ரா இல்லாதது பிள்ளையார் சுழி போல கேள்வியாக்கப்பட்டது. அடுத்தபடியாக ரிஷப் பண்ட் இல்லாதது போட்டியாளர்களின் பட்டியலை கூர்ந்து கவனிக்க செய்தது. இறுதியில் உமேஷ் யாதவ்க்கான வாய்ப்பு ஒரு சிலரை கண்கலங்க செய்தது. அது ஆனந்த கண்ணீர் என நினைப்பவர்களுக்கு ஒரு நிமிடம் மெளனமே பதில் சொல்லி விடும்.

விமர்சனத்திற்குள்ளான வீரர்கள்

உலக கோப்பை டி20 அணியில் இடம் பிடித்துள்ள இந்திய வீரர்கள், ஒரு சீரான ரிதமில் உலக கோப்பை போட்டிக்கு செல்ல வேண்டும் என்பது தான் பிசிசிஐயின் எண்ணம் என்றால், உமேஷ் யாதவ் மொகாலிக்கு பக்கத்தில் பிளாட் வாங்கியிருந்தாரா என்பது போல, அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருந்தது பேசு பொருளானது. சரி, உலக கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள மற்ற வீரர்கள் என்ன சிறப்பாக செய்தார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு, உமேஷ் யாதவ் குறித்து விமர்சிக்கலாம்.

கடந்த 6 மாதங்களாகவே, ஆசிய கண்டங்களில் இருக்கும் மைதானங்களின் லாஜிக் என்னவென்றால், டாஸ் வெல்லும் அணியே போட்டியை வெல்லும் என்பதாகும். ஐபிஎல் போட்டிகள் தொடங்கி, சமீபத்திய ஆசிய கோப்பை வரை, ஐக்கிய அரபு அமீரகத்தின் மைதானங்களில் ஒரு மேட்ச் வின்னிங் ஃபார்முலாவாகவே பேசப்பட்ட இந்த டாஸ் சீக்ரெட், ஒரு கட்டத்தில் மனதளவிலும் ஒருமாதிரியான பார்மேட்டை உருவாக்கியது போல, இப்போதெல்லாம் டாஸ் வெல்லும் அணிக்கு கூடுதல் நம்பிக்கையை தருகிறது அந்த பூவா, தலையா நாணயம்.

ஆஸ்திரேலிய அணி டாஸ் வெல்ல, உடனே பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய முதல் ஓவரிலேயே 200 ரன்கள் இலக்கிற்கான ஆட்டத்தை தான் விளையாடும் என்பது ரோஹித் சர்மாவின் பேவரைட் ஷாட்டான ஃபுல் ஷாட் சிக்சரில் தெளிவாக தெரிந்தது. அதே பார்மில் அடுத்த பந்தை பவுண்டரி நோக்கி விரட்ட, மூன்றாவது ஓவரின் 4 வது பந்தில் ரோஹித் ஷர்மாவே பெவிலியன் நோக்கி நடையை கட்ட ஆரம்பித்தார். அதன் பின் ஜோடி சேர்ந்த விராத் கோலி மைதானத்திற்கு சென்ற வேகத்திலேயே திரும்பினார்.

நம்பிக்கை தந்த ஜோடி

35-2 என இருந்த போது, மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ், கே எல் ராகுல் இணை அதிரடியாக விளையாடி 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த போது, 11.5 வது ஓவரில் ஜோஸ் ஹேசில்வுட் பந்தில் கேட்ச் ஆனர் கே எல் ராகுல். அதன் பின் இரு நானும் வரேன்னு சொல்லி, சூர்யா குமார் யாதவ் அவுட் ஆக, வழக்கமான ஆவேசத்துடன் களமிறங்கினார் பாண்டியா 2.0. ஆம் பாண்டியா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நல்ல பேட்டிங் ரெக்கார்டு வைத்திருக்கும் வீரர் என்ற தனி நம்பிக்கை, அவரது பார்மை துளி அளவு கூட சந்தேகம் கொள்ளாத வகையில் அதிரடி, சரவடி ஆட்டத்தை காட்ட செய்தது.

பந்துகளை பறக்க விட்ட பாண்டியா

வெறும் 30 பந்துகளில் 5 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் என 71 ரன்கள் குவித்து சண்டை செய்தார் ஹர்திக் பாண்டியா எனும் குங் ஃபூ பாண்டியா. அதுவும் கமரூன் கிரீன் வீசிய 20 வது ஓவரில் கடைசி மூன்று பந்துகளை ஹாட்ரிக் சிகார்கள் அடித்து, தமக்கே உரிய பாணியில் சிதறடித்து இந்திய அணியின் ஸ்கோரை 207 ரன்களுக்கு உயர்த்தினார் பாண்டியா.

சரி எதிர்பார்த்த மாதிரியான ஸ்கோர் வந்துவிட்டது, இனி ஆஸ்திரேலிய அணியை ஒரு 160 ரன்களுக்குள் சுருட்டி விடலாம் என்று தான் ரோஹித் ஷர்மா அண்ட் கோ நினைத்து களத்தில் இறங்கி இருக்கும். ஆனால் அங்கு நடந்ததே வேறு! பவர் ப்ளே ஓவர்களில் இந்தியாவின் கணிப்புப்படி 2 விக்கெட்டுகள் எதிர்பார்த்த நிலையில், 3.3 வது ஓவரில் அக்சர் படேல் கேப்டன் பின்ச் விக்கெட்டை பவுல்ட் எடுக்க, அணியே சந்தோஷத்தில் தத்தளித்தது. அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்டீவன் ஸ்மித், கேமரூன் கிரீன் ஜோடி, 11 வது ஓவர் வரை அம்ப்பயர்களை களைப்படைய செய்தது மட்டுமல்லாமல், பவுலர்களை பாடாய் படுத்தியது.

ஆஸ்திரேலிய அணியின் புதிய ஒபனரான கேமரூன் கிரீன் 201 ஸ்ட்ரைக் ரேட்டில், 30 பந்துகளில் 4 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் டாப் கியரில் விளையாடி 61 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அடிதளம் அமைத்தார். மொகாலி பிட்ச் பொறுத்தவரை சேசிங்கிற்கு பக்கபலமாக இருக்கும் என்று சொன்னார்களே ஒழிய, இந்தியாவின் அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர் குமார், யஷ்வேந்திர சாஹல் மற்றும் ஹர்சல் படேல் உள்ளிட்டவர்கள் பாரி வள்ளலாக 40 ரன்களுக்கும் மேலாக வழங்கி இருந்ததுவே, “ரோஹித் சர்மாவின் மயக்கமா, கலக்கமா மைண்டு ஃபுல்லா குழப்பமா?” வரிகளுக்கு அர்த்தமாக விளங்கியது.

சரியாக 1 மாதத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வைத்து விட்டு, அணியை அறிவித்த பிறகும் கூட பரிட்சை நடத்தி வருவது போல தோன்றுகிறது இந்திய அணியின் பவுலிங் ஸ்குவாட் செயல்பாடு. கேமரூன் கிரீன் விக்கெட்டை 11 வது ஓவரில் எடுத்த பின்னர் நல்ல கம் பேக் கொடுப்பார்கள் என எண்ணிய நிலையிலும், அடுத்தடுத்து ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய விக்கெட்டுகளான ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் பெவிலியன் திரும்ப,  அப்போதைய ரன் ரேட் வீதம் ஒரு ஓவருக்கு 10 க்கும் குறைவாகவே இருந்தது.  டி 20 போட்டிகளை பொறுத்த வரை, இயக்குனர் ஹரி படம் போல எப்போது வேகமெடுக்கும், எப்போது நிலை தடுமாறும் என தெரியாது.

அதே போல தான் குரூசியல் ஓவர்கள் என்று சொல்லக்கூடிய பவர் ப்ளே ஓவர்களில் இந்தியாவின் கணிப்பு கலகலப்பு ஆனது. 6 ஓவர்களில் 60 ரன்கள் கொடுத்தது தான் ஆஸ்திரேலியாவுக்கு ப்ரேக் த்ரூவாக அமைந்தது. அதன் பின் உமேஷ் யாதவ், அக்ஷர் படேல், சாஹல் என ஆளுக்கு ஒரு விக்கெட் எடுக்க, ஆஸ்திரேலியாவின் வேகம் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், ஐபிஎல் தொடர்களில் விளையாடுவது போல அதிரடி காட்ட ஆரம்பித்த மேத்யூ வேட் இறுதிவரை நின்று விளையாடி 45 ரன்கள் சேர்த்ததுடன், 19.2 ஓவரில் ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்ட உதவினார்.

இந்திய அணியின் மோசமான பந்துவீச்சில் இருந்து தப்பித்தது அக்ஷர் படேல் மட்டுமே என்றாலும், மீதம் உள்ள பவுலர்கள் அனைவரும் தாங்கள் வெளிநாட்டில் பவுலிங் போடுவது போல, சொந்த மண்ணிலேயே வாரி இரைத்து இருப்பது தற்போது இந்திய அணியில் குழப்பத்தை மீண்டும் அதிகரித்துள்ளது. இன்னும் ஒருமாத காலம் மட்டுமே உள்ள நிலையில், அணியின் பர்பாமென்ஸ் மோசமடைய காரணம் என்ன? பும்ரா இல்லாதது ஏன்? புவனேஷ்வர் குமாருக்கு என்னதான் ஆச்சு? சாஹலுக்கு பந்துவீச்சு மறந்துவிட்டதா? என பல கேள்விகள் அடுக்கபட்டு வருவது, ரோஹித் தலையில் மீண்டும் “மயக்கமா, கலக்கமா மைண்டு ஃபுல்லா குழப்பமா?” வரிகளை மட்டுமே ஓட செய்கிறது.

அடுத்த போட்டியில் அசத்துமா இந்தியா? 

இந்தியாவுக்கு எதிரான முதல் T-20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், கேமரூன் கிரீன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.  முதல் போட்டியை நழுவ விட்ட இந்திய அணிக்கு, அடுத்த போட்டி ஆஸ்திரேலியாவுக்கு பாடம் கற்பிக்குமா? இந்திய அணிக்கு இன்னொரு பாடமாக அமையுமா என்பதை வரும் 23 ஆம் தேதி  நடக்கும் டி 20 போட்டி தான் பதில் சொல்லும். அதே சமயம் இந்திய அணியின் தேர்வு குழுவினர், இதுகுறித்து மீண்டும் ஆலோசனை செய்து அடுத்தடுத்த போட்டிகளில் வலுவான பவுலிங் ஆர்டரை களத்தில் விளையாட வைப்பார்கள் எனவும் எதிர்பார்க்க படுகிறது.

– நியூஸ் 7 தமிழ் செய்திகளுக்காக நாகராஜன் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசு விழாக்களில் என் புத்தகங்களை பரிசளிக்க வேண்டாம்: இறையன்பு கோரிக்கை

Halley Karthik

ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு

Halley Karthik

மேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல்!

Niruban Chakkaaravarthi