துணை முதலமைச்சராக உள்ள அஜித் பவார் மகாராஷ்டிரா முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் விலகிய அஜித் பவார், மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பா.ஜ., கூட்டணியில் இணைந்து துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது ஆதரவாளர்கள் 8 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர்.

இதனையடுத்து அனைவரையும் கட்சியை விட்டு நீக்குவதாக சரத்பவார் அறிவித்திருந்தார். தங்களுக்கு தான் எம்எல்ஏக்களின் ஆதரவு அதிகம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அஜித் பவார் உரிமையும் கோரியிருந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரித்விராஜ் சவான் பிராந்திய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது.
“ தற்போது மகராஷ்டிரா துணை முதலமைச்சராக உள்ள அஜித்பவார் ஆகஸ்ட் 10ம் தேதி மகராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் 15பேர் மீது ஆகஸ்ட் 10ம் தேதி தகுதி நீக்கம் செய்யப்படும் முடிவு எடுக்கப்படும். இதன் பிறகு ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிவிடுவார். இதனைத் தொடர்ந்து அஜித் பவார் முதலமைச்சராக பதவியேற்பார்” என பிரித்விராஜ் சவான் தெரிவித்துள்ளார்.







