கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து பல்வேறு தலைவர்களும் தங்களின் கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு பாஜக தலைவர்கள் இது தொடர்பாக தங்களது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:
தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்:
“சென்ற திமுக அரசு, கோவை பெரியார் அறிவுலகம் எழுப்பியதற்கு முழு சொந்தம் கொண்டாடினார்கள். ஒரு ஆட்சி மாறி அடுத்த ஆட்சியில் திட்டங்களை அடுத்து ஆட்சி திறந்து வைப்பது இயற்கைதான். ஆனால் அதை சற்றும் பொறுத்துக் கொள்ளாமல் முழு உரிமையும் தங்களுக்குத்தான் என்றும், அந்த நூலகத்தில் ஒவ்வொரு நகர்வையும் தனிப்பட்ட முறையில் நான் சரி பார்த்தேன் என்று சொன்ன முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி கொடுத்து கொண்டு இருக்கும்போதே பின்னால் கொள்ளையடிப்பது கொள்கை என்று குற்றம் சாட்டப்பட்ட செந்தில் பாலாஜி, நேரு, எ.வ.வேலு போன்றவர்கள் நின்று கொண்டு இருந்ததை பார்த்தால், எதை எண்ணினார்கள் எதை சரி பார்த்தார்கள் என்றே கேள்வி கேட்க தோன்றுகிறது.
குடிப்பதை ஊக்குவித்து பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று ஊழல் செய்தவர்கள் இன்று படிப்பதிலும் புத்தகம் வாங்குவதிலும் ஊழல் செய்திருக்கிறார்கள் என்பது மன்னிக்க முடியாத குற்றம்… இது ஒரு அறிவு திருட்டு என்பது மட்டுமல்ல இந்த தவறான போலி AI நூல்களை வருங்கால சந்ததியினர் படித்திருந்தார்கள் என்றால்.. பெரியார் அறிவு நூலகம் என்று இவர்கள் பெயர் வைத்தது பெரியார் அறம் இல்லாத நூலகமாக மாறிக்கொண்டிருந்திருக்கிறது.
இதற்கு முன்னால் ஊழலில் மக்களின் அடிமடியில் தான் கை வைத்துக் கொண்டு இருந்தார்கள் இன்று குழந்தைகளின் அறிவிலேயே கையை வைக்க ஆரம்பித்து விட்டார்கள். என்ன கொடுமை இது? எந்த உலகத்திலும் நடக்காத ஒன்று. பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக இந்த ஊழலுக்கும் உரிமை கொண்டாடுவார்களா ? பொறுப்பேற்பார்களா..? அதே நேரத்தில் இந்த அரசு பாராபட்சம் பார்க்காமல் இந்த அறிவுத்திருட்டை உடனே கண்டுபிடித்து தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அத்தனை நூல்களும் எழுத்தாளர்கள் குழு கொண்டு மாற்றி அமைக்க வேண்டும். ஆக ஊருக்கு ஒரு நூலகம் ஊழலுக்காக தானா?” இவ்வாறு அவர் வினவியுள்ளார்.
முன்னாள் பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீநிவாசன்:
“கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் வாங்கியதில் மிகப் பெரிய ஊழலும், புத்தகங்களில் தமிழர் வரலாறு, செய்யுள்கள் உள்ளிட்டவையும் தவறாகக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படும் செய்தி மிக அதிர்ச்சி அடைய வைக்கிறது.
தமிழின் தொன்மை குறித்தும், தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி உலகமெங்கும் பறைசாற்றி வரும் இவ்வேளையில் தவறான கருத்துக்கள், வரலாறு மற்றும் பிழைகளுடன் நூல்களைப் படிக்கும் இளைய சமுதாயமும், போட்டித் தேர்வர்களும், இலக்கிய ஆர்வலர்களும், வாசிப்பாளர்களும் முற்றிலும் குழப்பமடையும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
“A library is a place where history comes alive, where the past speaks to the present, and where the future is shaped.” என்ற ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் சிந்தனைக்கே நேர்ந்த மிகப்பெரிய அவமானம் இது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.




