ஜப்பானை வீழ்த்தி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையைத் தக்க வைத்த இந்தியா!

லீக் மற்றும் அரையிறுதிப் போட்டிகளைத் தொடர்ந்து இறுதிப்போட்டியிலும் அசத்திய இந்திய அணி, 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி 2026 ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்தது.

ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2026 ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் ஜப்பானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி 6 வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. மொகாலியில் உள்ள ஒலிம்பியன் பல்பீர் சிங் சீனியர் சர்வதேச ஹாக்கி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில், முதல் பாதியில் பின்தங்கியிருந்த இந்திய அணி, இரண்டாவது பாதியில் அடுத்தடுத்து 4 கோல்களை அடித்து அபார வெற்றியைப் பதிவு செய்து சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்தது .

முதல் பாதியில் முன்னிலை பெற்ற ஜப்பான்!

பரபரப்பாகத் தொடங்கிய இறுதிப்போட்டியில் ஜப்பான் அணி ஆரம்பத்திலேயே இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் மட்சுமோட்டோ அடித்த கோல் மூலம் ஜப்பான் 1-0 என முன்னிலை பெற்றது. இதையடுத்து இந்திய அணி கோல் அடிக்கத் தீவிரமாக முயற்சி செய்தபோதிலும், ஜப்பானின் தற்காப்பு ஆட்டத்தை உடைக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்தது.

இரண்டாவது பாதியில் இந்தியாவின் அதிரடி!

இரண்டாவது பாதியில் புதிய உத்வேகத்துடன் களமிறங்கிய இந்திய அணி, தாக்குதல் ஆட்டத்தைத் தீவிரப்படுத்தியது. ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் ஆதித்யா கொடுத்த அற்புதமான பந்தைப் பயன்படுத்தி ஷிலானந்த் லக்ரா கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார். தொடர்ந்து 49-வது நிமிடத்தில் ஹர்திக் சிங்கின் சிறப்பான முயற்சிக்குப் பலனாக தில்பிரீத் சிங் கோல் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது. இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்த நிலையில், 53-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஜூக்ராஜ் சிங் மின்னல் வேகத்தில் டிராக் ஃபிளிக் மூலம் கோல் அடித்தார். இதனால் இந்தியாவின் முன்னிலை 3-1 என அதிகரித்தது. அடுத்ததாக, எதிரணியின் தடுப்பாட்டத்தில் இருந்து கிடைத்த ரீபவுண்ட் பந்தை விவேக் சாகர் பிரசாத் வலுவான ஹாஃப் வாலி ஷாட்டின் மூலம் கோலாக மாற்றினார். இதனால் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடிக்கவில்லை!

இந்தத் தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரரும் இந்திய அணியின் கேப்டனுமான ஹர்மன்பிரீத் சிங், இறுதிப்போட்டியில் கோல் அடிக்கவில்லை. இருப்பினும், தொடர் முழுவதும் அணியின் வெற்றிக்கு அவரது பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.

200-வது சர்வதேசப் போட்டியில் ஹர்திக் சிங்!

இந்த இறுதிப்போட்டி இந்திய அணிக்கு மட்டுமின்றி, நட்சத்திர மிட்ஃபீல்டர் ஹர்திக் சிங்குக்கும் மறக்க முடியாத தருணமாக அமைந்தது. ஜப்பானுக்கு எதிரான இந்தப் போட்டியின் மூலம் அவர் தனது 200-வது சீனியர் சர்வதேசப் போட்டியில் விளையாடி புதிய மைல்கல்லை எட்டினார். குறிப்பாக, ஹர்திக் சிங் தனது ஹாக்கி பயணத்தைத் தொடங்கிய மொகாலி மண்ணிலேயே இந்தச் சாதனையைப் படைத்தது கூடுதல் சிறப்பாக அமைந்தது.

கொண்டாட்டத்தில் மிதந்த மொகாலி!

இந்திய அணியின் வெற்றியைத் தொடர்ந்து மைதானமே கொண்டாட்டத்தில் அதிர்ந்தது. பஞ்சாபி பாடல்கள் ஒலிக்க, ரசிகர்கள் உற்சாகமாக நடனமாடினர். ‘சக் தே இந்தியா’ என்ற முழக்கங்கள் மைதானம் முழுவதும் எதிரொலித்தன. வானவேடிக்கைகளும் மொகாலி வானத்தை அலங்கரித்தன. தோல்வியடைந்த ஜப்பான் அணியினரின் சிறப்பான ஆட்டத்தையும் ரசிகர்கள் கைதட்டி பாராட்டினர். மொகாலி மைதானத்தில் நடைபெற்ற முதல் சர்வதேச ஹாக்கிப் போட்டிகளிலேயே அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் இடம்பெற்றது அந்த நகருக்கு மேலும் பெருமை சேர்த்தது.

இதன் மூலம் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி மீண்டும் கோப்பையை வென்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. இந்திய ஹாக்கி ரசிகர்களுக்கு மட்டுமின்றி, மொகாலி நகருக்கும் இந்த வெற்றி ஒரு மறக்க முடியாத விளையாட்டு வரலாற்று நிகழ்வாக அமைந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.