திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக பாலிவுட் நடிகை ராக்கி சாவந்தின் கணவர் மீது ஈரான் பெண் மைசூரு போலீஸில் பாலியல் புகார் அளித்துள்ளார்.
பாலிவுட் நடிகையான ராக்கி சாவந்த், தமிழிலும் முத்திரை, கம்பீரம் போன்ற ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தி சேனல் ஒன்றில் ஒளிபரப்பான பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவர் மிகவும் பிரபலமடைந்தார். 2022 ஆம் ஆண்டு இவர் தொழிலதிபர் அதில் கான் துரானி என்பவரை திருமணம் செய்துகொண்டதன் காரணமாக இஸ்லாமுக்கு மதம் மாறி தனது பெயரை ராக்கி சாவந்த் ஃபாத்திமா என மாற்றிக் கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
தொழிலதிபர் அதில் கான் துரானியின் நிறுவனம் மைசூரில் செயல்பட்டு வருகிறது. அவருக்குச் சொந்தமான ஐஸ்கிரீம் பார்லர் ஒன்றும் அதே பகுதியில் இயங்கி வருகிறது. மைசூரில் ஃபார்மா படிப்பு பயின்று வரும் ஈரானைச் சேர்ந்த மாணவி ஒருவர், விவி புரம் காவல் நிலையத்தில் அதில் கான் துரானி மீது பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், துரானிக்குச் சொந்தமான ஐஸ் கிரீம் பார்லரில் வைத்து தனக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், நாளடைவில் இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கியதாகவும் மாணவி புகாரில் தெரிவித்திருந்தார். தன்னை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென அதில் தன்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
அதனால் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அவரிடம் தான் வற்புறுத்தியபோது, இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாகவும், கொலை செய்து விடுவதாகவும் அதில் கான் துரானி தன்னை மிரட்டியதாக மாணவி புகாரில் குறிப்பிட்டிருந்தார். புகாரின் அடிப்படையில் விவி புரம் போலீசார் தொழிலதிபர் அதில் கான் துரானி மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே நடிகை ராக்கி சாவந்த், கணவர் அதில் கான் துரானி மீது சொத்துக்களை அபகரித்துவிட்டதாகவும், பணம், நகைகளை திருடிவிட்டதாகவும் அளித்த புகாரின் அடிப்படையில் மும்பை ஓஷிவாரா காவல்துறையினர் பிப்ரவரி 7 ஆம் தேதி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் தொடர்ச்சியாக ஈரானைச் சேர்ந்த மாணவி அளித்த புகார் தொடர்பான வழக்கிலும் அதில் கான் துரானி கைது செய்யப்படவுள்ளதாக காவல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகையின் கணவர் அடுத்தடுத்த வழக்குகளில் சிக்கும் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-ம.பவித்ரா








