ஐபிஎல் டி20 தொடரின் 64 வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதரபாத், பஞ்சாப், டெல்லி, குஜராத், லக்னோ ஆகிய 10 பங்கேற்று விளையாடி வருகின்றன.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி உள்ள நிலையில் 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் எஞ்சியுள்ள இரு ஆட்டங்களிலும் வெற்றிபெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் உள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. இந்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்தே லக்னோ அணியின் அடுத்த கட்ட வாய்ப்பு தெரியவரும்.
டெல்லி கேபிடல்ஸ் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்றைய போட்டி கடைசி லீக் ஆட்டமாகும். இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது என்பது கடினமே. டெல்லி அணி தனது கடைசி ஆட்டத்தில் 47 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. இந்த ஆட்டத்தில் தடை காரணமாக கேப்டன் ரிஷப் பந்த் களமிறங்கவில்லை. இன்றைய ஆட்டத்தில் அவர், களமிறங்குவது டெல்லி அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கக்கூடும்.







