டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 62ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதரபாத், பஞ்சாப், டெல்லி, குஜராத், லக்னோ ஆகிய 10 பங்கேற்று விளையாடி வருகின்றன.
லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில், நேற்று இரண்டு போட்டிகள் அரங்கேரியது. அதில் முதல் போட்டி பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்து கொண்டுள்ளது.
இதையும் படியுங்கள் : காஸாவில் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் | பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்!
இதையடுத்து, நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. இதன்மூலம் டெல்லி அணிக்கு 188 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ரஜத் பண்டிதர் 52 ரன்கள் எடுத்தார். வில் ஜாக்ஸ் 41 ரன்கள் எடுத்தார். டெல்லி சார்பில் கலீல் அஹ்மத், ராசிக் சலாம் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகேஷ் குமார், குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதையடுத்து, களமிறங்கிய டெல்லி அணியை அக்சர் படேல் அணியை வழிநடத்தினார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் களமிறங்கினர். முதல் ஓவரில் ஒரு ரன் எடுத்த நிலையில் வார்னர் ஆட்டமிழந்தார். மூன்றாவது ஓவரில் அபிஷேக் போரல் மற்றும் ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் ஆட்டமிழந்தனர். அடுத்த ஓவரில் குமார் குஷக்ரா வெளியேறினார்.
11-வது ஓவரில் ஸ்டப்ஸ் ரன் அவுட் ஆனார். கேப்டன் அக்சர் படேல் 39 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 19.1 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. இதன் மூலம் 47 ரன்களில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதன் மூலம் புள்ளி பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது பெங்களூரு அணி.










