“இட்லி + சிக்கன் குழம்பு” வித்தியாசமான கலவை என கூறிய தொகுப்பாளர் – ட்ரோல் செய்யும் இணையவாசிகள்!

இட்லியுடன் சிக்கன் குழம்பு சாப்பிடுவதை வித்தியாசமான கலவை என தொகுப்பாளர் காமியா ஜானி கூறிய நிலையில், இணையவாசிகள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.  மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர்,  குஷி கபூர்…

இட்லியுடன் சிக்கன் குழம்பு சாப்பிடுவதை வித்தியாசமான கலவை என தொகுப்பாளர் காமியா ஜானி கூறிய நிலையில், இணையவாசிகள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். 

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர்,  குஷி கபூர் ஆகியோர் அம்மா வழியில் நடிகையாகிவிட்டனர்.  மூத்த மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘தடக்’ என்கின்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.  கடந்த 6 ஆண்டுகளாக இவர் பல பாலிவுட் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

இந்த சூழலில் ‘கர்லி டேல்ஸ்’ நிறுவனர் காமியா ஜானி, கடந்த மாதம் நடிகர் ஜான்வி கபூருடனான தனது நேர்காணலின் கிளிப் வைரலானதை அடுத்து இணையவாசிகள் காமியா ஜானிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். மும்பையின் பாந்த்ராவில் உள்ள ஜான்வி கபூரின் வீட்டில், உணவுக்காக நடைபெற்ற நேர்காணலில்,  காமியா ஜானி இட்லியுன், சிக்கன் குழம்பு சாப்பிடுவதைப் பற்றி ஆச்சரியமாக பேசினார்.

இந்த நேர்காணலின் போது ஜான்வி கபூர் மற்றும் காமியா ஜானிக்கு தோசை, இட்லி, சிக்கன் கறி, பனீர் புர்ஜி மற்றும் மூங் தால் சில்லா உள்ளிட்ட உணவுகளை ஜான்வி கபூரின் வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் வழங்கினர்.  அப்போது ஜான்வி கபூர், காமியா ஜானியிடம் “நீங்கள் இட்லியுடன் சிக்கன் கறி சாப்பிட வேண்டும்” என்று கூறினார். இதனைகேட்ட காமியா “என்ன? இட்லியுடன் சிக்கன் கறியா?” என ஆச்சரியமடைந்து ஜான்வி கபூரிடம் கேட்டார்.  அதற்கு ஜான்வி கபூர் “நீங்கள் அதை முயற்சி செய்ய வேண்டும்” என்று கூறினார்.

“இதை நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ளீர்களா? அல்லது இதுதான் சரியானதா?” காமியா ஜானி மேலும் ஆச்சரியத்துடன் தொடர்ந்தார்.  “கோழிக்கறியுடன் இட்லி. உங்களில் எத்தனை பேர் இதை முயற்சித்துள்ளீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இதை முயற்சி செய்ய நான் மிகவும் பதட்டமாக இருக்கிறேன்” என்று அவர் கூறுகிறார். தொடர்ந்து அவர், இட்லியில் சிக்கன் குழம்பை ஊற்றி கரண்டியில் சாப்பிட முயன்றார காமியா.  அப்போது, ஜான்வி கபூர், “உங்கள் கையால் சாப்பிடுங்கள்” என்று கூறினார்.

“இட்லியை கையால் சாப்பிடுவது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை,” என்று சிரித்தபடி பதிலளித்தார் ஜானி.  அதற்கு பதிலளித்த ஜான்வி கபூர், “நூடுல்ஸ் உள்பட எதையும் கையால் சாப்பிட முடியும்” என்றார்.  இருப்பினும் காமியா ஜானி கரண்டியால் இட்லியுடன் சிக்கன் குழம்பை சுவைத்தார்.  பிறகு நன்றாக இருக்கிறது என கூறினார்.  இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  இதனையடுத்து  “இட்லியும் கோழிக் கறியும் எப்படி வித்தியாசமான கலவையாகும்?” என இணையவாசிகள் பலரும் காமியா ஜானிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.