பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்இட ஒதுக்கீடு குறித்த அறிக்கையை முதலமைச்சரிடம் நீதியரசர் முருகேசன் தாக்கல் செய்தார்.
2020-21ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதேபோன்று, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளில் கடந்த ஆண்டுகளின் மாணவர் சேர்க்கை விவரங்களின்படி, அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னிலை வகிக்கும் சுயநிதிக் கல்லூரிகளில், மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.
இதுகுறித்துக் குறிப்பிட்டு, இந்நிலை மாற்றப்பட வேண்டுமென்று பல்வேறு தரப்பினரிடமிருந்து அரசுக்குக் கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஒரு குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்தார்.
இதனையடுத்து ஒரு மாத காலம் ஆய்வு மேற்கொண்ட நீதியரசர் முருகேசன், இன்று மாலை 5 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.







