நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து பக்தர்களை வெளியேற்ற இடைக்காலத் தடை!

நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள அவரது பக்தர்களை வெளியேற்ற இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு…

நித்யானந்த தியான பீடத்தின் அறங்காவலர் சந்திரசேகரன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்திருந்த மனுவில்,

“ராஜபாளையம் சேத்தூர் மற்றும் கோதைநாச்சியாபுரம் கிராமத்தில் உள்ள மருத்துவர் கணேசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் தங்கி உள்ள சிஷ்யைகள் வெளியேற வேண்டும் என் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இதன் அடிப்படையில் ராஜபாளையம் டி.எஸ்.பி. சேத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நித்தியானந்தா ஆசிரமரத்தில் உள்ள சிஷ்யைகளை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வழக்கு நிலுவையில் இருக்கும் போது, யாரையும் வெளியேற்ற கூடாது. எனவே கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி,  “நித்தியானந்தா தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் இல்லை. எனவே நித்தியானந்தா தொடர்பான வழக்கை எப்படி விசாரிக்க முடியும்? என கேள்வி எழுப்பினார். மேலும் நித்தியானந்தாவுக்கும், நித்தியானந்தா மடம் தொடர்பான சொத்துகளுக்கும் தொடர்பு இல்லை எனக் கூறி அதற்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது” எனக் கூறினார்.

தொடர்ந்து நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள அவரது பக்தர்களை வெளியேற்ற இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மனு குறித்து, ராஜபாளையம் டி.எஸ்.பி. பதில் மனு தாக்கல் செய்யவும், வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தும் உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.