ராமநாதபுரத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியை 10 ஆண்டுகளாக ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து கொடுமைப்படுத்தும் அவலம் அரங்கேறியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த பரமேஸ்வரனும் ராமநாதபுரம் மாவட்டம் தெற்கூர் பகுதியைச் சேர்ந்த உமாவதி என்பவரை பத்து ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பரமேஸ்வரன் வீட்டில் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் உமாவதி வீட்டில் இவர்களது திருமணத்தை ஏற்றுக் கொண்டனர்.
இதையடுத்து இருவரும் தெற்கூர் பகுதியில் வசித்து வருகின்றனர். ஆனால், இவர்களது திருமணத்தை அந்த ஊர் மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக சாமி கும்பிட, பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பது உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் ஊருக்கு வெளியே வசித்து வந்த நிலையில், உமாவதியின் தாய் ஊருக்குள் தனக்கு சொந்தமாக ஊருக்குள் இருக்கும் நிலத்தை உமாவதின் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். இதானால், அவர் குடும்பத்துடன் ஊருக்குள் குடிபெயர அனுமதிக்காத அக்கிராம மக்கள் அந்த இடத்திற்கு செல்லும் பொது பாதையை முள் செடிகள், கம்பி வேலியை வைத்தும் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், தங்களுக்கு சொந்தமான நிலத்தை பயன்படுத்த அனுமதி மறுப்பதாக ஊர்பொதுமக்கள் மீது, ராமநாதபுரம் ஆட்சியர் சந்திரகலாவிடம் பரமேஸ்வரன் – உமாவதி தம்பதியர் புகார் மனு அளித்துள்ளனர். ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







