ஐ.என்.எஸ் விக்ராந்த் – என்னென்ன சிறப்பம்சங்கள்?

முழுமையாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலின் சிறப்புகளைப் பற்றி பார்க்கலாம்… இந்தியாவில் உற்பத்தி துறை தன்னிறைவு அடைந்து கால் நூற்றாண்டுகாலம் ஆகிவிட்டது. அனுகுண்டு, விண்வெளி, செயற்கை கோள், சூப்பர் கம்ப்யூட்டர்…

முழுமையாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலின் சிறப்புகளைப் பற்றி பார்க்கலாம்…

இந்தியாவில் உற்பத்தி துறை தன்னிறைவு அடைந்து கால் நூற்றாண்டுகாலம் ஆகிவிட்டது. அனுகுண்டு, விண்வெளி, செயற்கை கோள், சூப்பர் கம்ப்யூட்டர் என அறிவியல் துறையின் வியக்க வைக்கும் வளர்ச்சியால் பல சாதனைகளைப் படைத்துள்ளது. ஆனாலும் பாதுகாப்புத் துறையில் அதிநவீன விமானங்கள், போர்க்கப்பல்கள், ராணுவ தளவாடங்கள், விமானம் தாங்கி போர்க்கப்பல்களை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. பாதுகாப்புத் துறையிலும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதத்தில் பல திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டன.

இந்திய கடற்படையின் முதல் விமானம் தாங்கி போர் கப்பல் 1961ல் பிரிட்டனிடமிருந்து வாங்கப்பட்டது. ஐ.என்.எஸ். விக்ராந்த் என பெயரிடப்பட்ட இந்த போர் கப்பல் 1971ல் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போரில் முக்கிய பங்காற்றியது. பின் 1997ல் படையில் இருந்து விலக்கப்பட்டது. 2017ல் பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டது. இதையடுத்து ரஷ்யாவிடமிருந்து 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர் கப்பல் 2013ல் வாங்கப்பட்டது. நம் கடற்படையில் உள்ள ஒரே விமானம் தாங்கி போர் கப்பலாக விக்ரமாதித்யா உள்ளது.

இந்நிலையில், கடற்படை முதல் முறையாக உள்நாட்டிலேயே விமானம் தாங்கி போர் கப்பலை உருவாக்க முற்பட்டது. 2009ல் துவங்கி 12 ஆண்டுகளில் ஐஎன்எஸ் விக்ராந்த் என பெயரிட்டு உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு பணிகள் நிறைவடைந்தன. இந்த போர்க்கப்பல் 4 முறை சோதனை செய்யப்பட்டது.

23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் கட்டமைக்கப்பட்டுள்ளது. போர்க் கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த கப்பல் கொச்சி கப்பல் கட்டும் தளத்தால் கட்டப்பட்டுள்ளது.

இந்த கப்பல் அதிநவீன தானியங்கி வசதிகளைக் கொண்டுள்ளது. இந்திய கடற்படை வரலாற்றிலேயே உள்நாட்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய கப்பல் இதுவாகும். இந்தக் கப்பலில் நூற்றுக்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட கருவிகளும், இயந்திரங்களும் ஏராளமாக இதில் பொருத்தப்பட்டுள்ளன.

முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.என்.எஸ்., விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல், இந்திய கடற்படையில் இணைவதையடுத்து, விமானம் தாங்கி கப்பல்களை வடிவமைக்கும் திறன் கொண்ட பட்டியலில் இந்தியாவும் இணைகிறது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே இப்படியலில் உள்ளது.

 

ஐ.என்.எக்ஸ்.விக்ராந்த் கப்பலில் ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த போர்க்கப்பலை கட்டமைக்க பி.எச்.இ.எல். மற்றும் எல்.என்.டி. உள்ளிட்ட சுமார் 500 இந்திய நிறுவனங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளன.இந்த கப்பல் இந்திய கடற்படைக்கு மேலும் பலத்தை கூட்டுவதாக அமைந்துள்ளது. இந்திய பெருங்கடலை அலங்கரிப்பதுடன், இந்திய கடற்படைக்கு வலுசேர்த்து கடல் எல்லைகளை காக்கும் பணியில் ஈடுபட உள்ளது. இந்த

போர்க்கப்பலின் நீளம் 262 மீட்டர்கள். அகலம் 62 மீட்டர் ஆகும். 59 மீட்டர் உயரம். இந்த போர்க்கப்பல் 45 ஆயிரம் டன் எடையைத் தாங்கும்.

மேலும், 7,500 நாட்டிக்கல் மைல்கள் தொடர்ந்து பயணிக்கும் வல்லமை கொண்டது. இதில், 1,700 வீரர்கள் பயணிக்க முடியும். வீராங்கனைகள் தங்குவதற்கு தனி இடவசதி உள்ளது.

15 அடுக்குகள் கொண்ட இந்த கப்பலில் 2,500 அறைகள் உள்ளன. அதில் பெண் அதிகாரிகளுக்கு என்று தனித்தனி கேபின்கள் உள்ளன. இந்த கப்பலில் இருந்து மிக் 29 கே போர்விமானங்கள், கமோவ் 31 ஹெலிகாப்டர்கள், எம்.எச்.-60, ஆர் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை இயக்கவும், தரையிறக்கவும் முடியும். மேலும் 30 விமானப்படை விமானங்களுடன் பயணிக்க கூடிய வல்லமை இந்த போர்க்கப்பலில் உள்ளது. இதன்

அதிகபட்ச வேகம் 28 நாட்டிகல் மைல் ஆகும். 1,700 வீரர்கள் பயணிக்கும்படியாக உருவாகி உள்ள இந்த கப்பலில் 2 அறுவை சிகிச்சை அறைகள், 16 படுக்கைள், பரிசோதனை மையங்கள், சி.டி.ஸ்கேன் வசதி என மிதக்கும் சிறப்பு மருத்துவமனையும்,

இடம் பெற்றுள்ளது. மருத்துவப் பணிக்காக மட்டும் 5 மருத்துவ அதிகாரிகள் உள்பட 21 மருத்துவப் பணியாளர்கள் பணி அமர்த்தப்படுவர்.

30 ஆயிரம் டன், அதி சிறப்பு வகையைச் சேர்ந்த 249 ஏ ,கிரேடு DMR ஸ்டீல் உலோகத்தை இந்திய அரசின் SAIL நிறுவனம் வழங்கியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஈபிள் கோபுரம் கட்டுவதற்கு உபயோகிக்கப்பட்டுள்ள இரும்புகளை விட நான்கு மடங்கு இரும்புகள் விக்ராந்த் போர்க்கப்பல் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 2,400 கிலோமீட்டர் அளவிற்கு நீளமுள்ள கேபிள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரு சிறிய நகரத்திற்குத் தேவையான மின்சாரத்தை உருவாக்கும் திறன் இந்த கப்பலுக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலின் முதலாவது சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்றது. அதன் பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர், கடந்த ஜனவரி, ஜூலை மாதம் என மொத்தம் 4 சோதனை ஓட்டங்கள் நடைபெற்றன.

அத்துடன், இன்னொரு சிறப்பம்சமாக புதிய விக்ராந்த் போர்க்கப்பலுக்காக புதிய கொடி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய கொடியில் இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கிராஸ் நீக்கப்படுகிறது. ஐஎன்எஸ் இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கொடி இனி அனைத்து இந்திய கடற்படைக் கப்பல்களிலும் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவைச் சுற்றி கண்ணுக்கு தெரியாத வகையில் செயல்படும் அண்டை நாடுகளின் சூழ்ச்சிகளை முறியடித்து. இந்திய கடல் எல்லையில் வெற்றி வியூகம் வகுக்க ஐ,என்.எஸ். விக்ராந்த் உதவும் என்பது பாதுகாப்பு நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.