உலகிற்கு இந்தியா அளித்த பரிசு யோகா கலை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
உலக யோகா தினத்தை முன்னிட்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் யோகா துறை சார்பில் யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் ஆளுநர் ரவி தமது மனைவியுடன் பங்கேற்று பயிற்சி செய்தார்.
விழாவில் ஆளுநர் பேசியதாவது :
“நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபை தலைமை செயலகத்தில் பிரதமர் மோடி தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது . இது நமக்கு பெருமையளிக்கும் விஷயம். யோகா நமது நாட்டின் பெருமை. உலகிற்கு இந்தியா அளித்த பரிசு. யோகாவை வாழ்வின் ஒரு பகுதியாக பார்க்கும்போது மனநலம் மட்டுமின்றி உடல்நலத்தையும் பேணி பாதுகாக்க முடியும்.
இந்தியாவில் அதிகம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். யோகா பயிற்சி செய்வதன் மூலம் சர்க்கரை நோய் இல்லாமல் வாழ முடியும். இந்த கிராமங்கள் வரை கொண்டு செல்ல வேண்டும். சிறு வயதில் இருந்து யோகா செய்து வருகிறேன். எனது உடல்நலத்திற்கு முக்கிய காரணம் யோகா தான்.
சிதம்பரம் யோகா கலை உருவான இடம். இங்கு பிறப்பிடமாக தொடங்கிய யோகா, நாடு முழுவதும் பரவியது. யோகா ஒரு சூத்திரம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருமூலர் இயற்றிய திருமந்திரத்தை பதஞ்சலி முனிவர் பயன்படுத்தினார். ஆசனங்களை பல தளங்களில் செயல்படுத்தி புதுமைகளை செய்திருக்கிறார். யோகா ஒரு சூத்திரம்”இவ்வாறு ஆளுநர் ரவி குறிப்பிட்டார்.






