இந்தியர்கள் மிகவும் அன்பானவர்கள் : பாகிஸ்தான் ஹாக்கி அணி தலைமை பயிற்சியாளர் புகழாரம்!

இந்தியர்கள் மிகவும் அன்பானவர்கள் என்றும், பாகிஸ்தானில் இருப்பதை போல் உணர்வதாக அந்நாட்டு ஹாக்கி அணியின் முன்னாள் வீரரும்,  தலைமை  பயிற்சியாளரான முஹம்மது சக்லைன் தெரிவித்துள்ளார் சென்னையில் நடைபெற்று வரும்  ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி…

இந்தியர்கள் மிகவும் அன்பானவர்கள் என்றும், பாகிஸ்தானில் இருப்பதை போல் உணர்வதாக அந்நாட்டு ஹாக்கி அணியின் முன்னாள் வீரரும்,  தலைமை  பயிற்சியாளரான முஹம்மது சக்லைன் தெரிவித்துள்ளார்
சென்னையில் நடைபெற்று வரும்  ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான தென் கொரியாவிடம் பாகிஸ்தான் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. இதனையடுத்து தலைமை பயிற்சியாளர் முஹம்மது சக்லைன் தனது இளம் அணியின் செயல்பாடு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
கடந்த 3 ஆம் தேதி, மலேசியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 3-1 என்ற கணக்கில் தோல்வியடைந்து, தொடக்க இரண்டு போட்டிகளிலும் தங்கள் அணி  வெற்றி  பெறாமல் ஒரு புள்ளியை மட்டுமே பெற்று 5 ஆவது இடத்தில் உள்ளது பாகிஸ்தான்.
“உண்மையில் நாங்கள் இன்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளோம். எங்களிடம் இருக்கும் அணியை பார்த்தால், பெரும்பாலான வீரர்களுக்கு இரண்டு அல்லது மூன்று  சர்வதேச போட்டிகளுக்கு மேல் விளையாடிய அனுபவம் இல்லை. எனவே, சர்வதேச  போட்டிக்கான பங்களிப்பு இங்கே மிகவும் முக்கியமானது.
இன்று மிகவும் அருமையான போட்டி. கொரியா உலகின் மிகச் சிறந்த அணியாகும். நாங்கள் ஒரு இளம் அணியை கொண்டு மிகவும் கடினமான போட்டியில் விளையாடினோம். நாங்கள் எங்கள் தரத்திற்கு  ஏற்ப விளையாடினோம், மீண்டும் பல வாய்ப்புகளை இழந்தோம்.  அதிர்ஷ்டமும் எங்களுக்கு சாதகமாக இல்லை. இந்த அணி சிறிது காலம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன், ஒருவேளை ஓரிரு வருடங்கள் கூட வேண்டும். அதற்கு பின் இது உலகின் சிறந்த அணியாக  இருக்கலாம்.
நாங்கள் பினிஷிங்கில் சிரமப்படுகிறோம். அர்பாஸ் அஹ்மத் அணியில் இல்லாதது மிகப்பெரிய இழப்பாகும். எங்களால் குறுகிய கார்னர்களை கோல்களாக மாற்ற முடியவில்லை.
இந்த மைதானத்தில் கடைசியாக சர்வதேச ஹாக்கி விளையாடியபோது நான் இங்கு இருந்தேன். கூட்டம் அருமையாக இருந்தது. நாங்கள் அதை இதுவரை ரசித்துள்ளோம், நாங்கள் இந்தியா உடனான போட்டியை எதிர்நோக்குகிறோம். இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்களாகவும் உதவிகரமாகவும் இருக்கிறார்கள்.
நாங்கள்  பாகிஸ்தானில் இருப்பதை போல் உணர்கிறேன். உணவு மிகவும் நன்றாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடிக்கும் கோல்கப்பே, ஆலு-சாட், ஆலு-மசாலா மற்றும் பிரியாணி வரை அனைத்தும் கிடைக்கிறது.  எங்கள் வீரர்கள் மட்டன் பிரியாணியை பார்த்தவுடன், அதை விரும்பி உண்கிறார்கள்” என அவர் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.