முக்கியச் செய்திகள் கட்டுரைகள் செய்திகள்

உலக தலைவர்களாக வலம் வரும் இந்திய வம்சாவளியினர்


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

ஒரு காலத்தில் இந்தியாவை 200 ஆண்டுகளுக்கும் மேல் ஆண்ட இங்கிலாந்தின் பிரதமராக தேர்வாகி, இந்தியர்களை பெருமிதம் கொள்ள செய்திருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக். அவர் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்திய வம்சாவளியினர் தலைமைப் பொறுப்பை ஏற்று இந்தியர்களுக்கு கவுரவம் சேர்த்துள்ளனர். இன, மொழி, மத வேறுபாடுகளை கடந்து அந்நாட்டு மக்களின் மனங்களை கவர்ந்து நாட்டின் தலைவராகியுள்ள அவர்கள் யார்? யார்? என்கிற விபரத்தை பார்ப்போம் கமலா ஹாரீஸ்

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா தேவி ஹாரீஸ்.  இவரது  தாய் ஷியாமளா கோபாலன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்கா நாடு துளசேந்திரபுரத்தைச் சேர்ந்தவர். அமெரிக்க அரசியல் வரலாற்றில் பெண் ஒருவர் அடைந்த உச்சபட்ச வளர்ச்சியாக அந்நாட்டின் துணை அதிபர் பதவியை கமலா ஹாரீஸ் அலங்கரித்து வருகிறார்.  சிறந்த வழக்கறிஞராக, சிறந்த நாடாளுமன்றவாதியாக வலம் வந்த கமலா ஹாரீஸ் தற்போது உலகின் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராக உள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஹலிமா யாகூப்

கமலாஹாரிசை போல் இந்தியர்களை உலக அரங்கில் பெருமிதம் கொள்ளச் செய்துள்ள மற்றொரு பெண் தலைவர் ஹலிமா யாகூப். சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் என்கிற பெருமையை பெற்றுள்ள ஹலிமா யாகூப் தந்தை இந்தியாவைச் சேர்ந்தவர்.  வாட்ச்மேனாக வேலை பார்த்த அவர் ஹலிமா யாகூப் 8 வயது சிறுமியாக இருக்குபோதே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இதனால் வறுமையில் வாடியது ஹலிமா யாகூப்பின் குடும்பம். எனினும் மனம் தளராது வறுமையோடு போராடி அதனை வென்று இன்று சிங்கப்பூரின் அதிபராக உயர்ந்திருக்கிறார். சிறந்த வழக்கறிஞராக வலம் வந்த ஹலிமா யாகூப் பின்னர், அரசியலில் களம் இறங்கி அந்நாட்டின் அமைச்சர், நாடாளுமன்ற சபாநாயகர் என வாழ்க்கையில் அடுத்தடுத்தக்கட்டத்திற்கு முன்னேறினார். 2017ம் ஆண்டு சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக பதவியேற்று அந்நாட்டு சரித்திரத்தில் இடம்பெற்றார். வறுமையை வீழ்த்தி வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் பெண்களுக்கு ஹலிமா யாகூப், ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார்.

பிரதிவிராஜ் சிங் ரூபன்

கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மொரீசியஸ் நாட்டு அரசியலில்  இந்திய வம்சாவளியினருக்கு எப்போதும் முக்கிய பங்கு இருந்து வருகிறது. மொரீசியஸ் நாடு பிரிட்டிஷ் அரசின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு குடியரசு ஆன பிறகு மொரீசியசின் முதல் அதிபராக பொறுப்பேற்றவர் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட வீராசாமி ரிங்காடோ. அதன் பிறகு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் மொரீஷியஸ் அதிபர் ஆகி இருக்கிறார்கள்.  தற்போது அதிபராக உள்ள பிரதிவிராஜ் சிங் ரூபன், கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 2ந்தேதி முதல் அந்த பதவியை வகித்து வருகிறார். கடந்த 1983ம் ஆண்டு முதல் சுமார் 40 வருடங்களாக மொரீசியஸ் நாட்டு அரசியலில் பயணித்து வருகிறார் பிரதிவி ராஜ் சிங் ரூபன்.

பிரவிந்த் ஜூகுநாத்

மொரீசியஸ் நாட்டின் அதிபர் மட்டும் அல்ல அந்நாட்டின் பிரதமரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்தான். மொரீசியஸ் நாட்டின் பிரதமராக கடந்த 2017ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார்  பிரவிந்த் குமார் ஜூகுநாத். மொரீசியஸ் நாட்டின் சிறந்த அரசியல் ஆளுமைகளில் ஒருவராக வலம் வரும் பிரவிந்த் ஜூகுநாத், புரட்சிகர சோசலிச இயக்கமான எம்.எஸ்.எம் கட்சியின் தலைவராக கடந்த 2003ம் ஆண்டு  அக்டோபர் 30ந்தேதி முதல் பதவி வகித்து வருகிறார். 1987ம் ஆண்டு முதல் மொரீசியஸ் அரசியலில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

வேவல் ராம்கலவன்

இந்திய பெருங்கடலில் உள்ள செஷல்ஸ் நாட்டின் 5வது அதிபராக உள்ள வேவல் ராம்கலவனின் தாத்தா பீகார் மாநிலத்தில் வசித்தவர். கடந்த 2020ம் ஆண்டு முதல் செஷல்ஸ் அதிபராக வேவல் ராம்கலவன் பதவி வகித்து வருகிறார். நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்த அவர் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் 54.9 சதவீத வாக்குகளை பெற்று செசல்ஸ் நாட்டின் 5வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முகம்மது இர்பான் அலி 

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கயானாவின் அதிபராக கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 2ந்தேதி முதல் பதவி வகித்து வருகிறார். வங்கி அதிகாரியாக, சிறந்த பொருளாதார அறிஞராக அறியப்பட்ட முகம்மது இர்பான் அலி, தற்போது அந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக உயர்ந்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இர்பான் அலி,  கயானா அரசியலில் தனித்துவம் மிக்க தலைவராக தற்போது வலம் வருகிறார்.

அன்டோனியோ கோஸ்டா

போர்ச்சுக்கல் நாட்டின் 119வது பிரதராக பதவி வகித்து வருகிறார் அன்டோனியோ லூயிஸ் சாண்டோஸ்டா கோஸ்டா. கடந்த  2015ம் ஆண்டு நவம்பர் 26ந்தேதி முதல் கடந்த 7 ஆண்டுகளாக போர்ச்சுகல் பிரதமராக பதவி வகித்து வரும் அன்டோனியோ கோஸ்டாவின் தாத்தா கோவா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

சான் சாந்தோகி

தென் அமெரிக்காவில் உள்ள சிறிய நாடான சுரிநேமின்  9வது அதிபராக கடந்த 2020ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார் சான் சாந்தோகி. 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியே இல்லாமல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் காவல்துறை அதிகாரியான சான் சாந்தோகி பின்னர் அரசியலில் களம் இறங்கி  சுரிநேமின் அதிபராகவும் ஆனார்.

லியோ வராட்கர்

ஐயர்லாந்து நாட்டின் இரண்டாவது உயரிய பதவியான தனைஸ்தேவாக உள்ளார்  லியோ வராட்கர். துணை அதிபருக்கு நிகரான அந்த பதவியை கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வகித்து வருகிறார் லியோ வராட்கர். ஐயர்லாந்தின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராகவும் அவர் உள்ளார். லியோ வராட்கரின் தந்தை அசோக் மும்பையை பூர்வீகமாக கொண்டவர்.

எஸ்.இலட்சுமணன்

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிப்.19 சென்னை வருகிறார் நிர்மலா சீதாராமன்: சி.டி.ரவி

Niruban Chakkaaravarthi

எழுவர் விடுதலை: மீண்டும் சிக்கல்

Niruban Chakkaaravarthi

36 செயற்கை கோள்களும் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தம்

G SaravanaKumar