மருத்துவர் அலி இரானி , சுஜோய் குமார் மித்ரா ஆகிய இரு இந்தியர்கள் 7 கண்டங்களுக்கும் குறுகிய காலத்தில் பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். அவர்கள் அண்டார்டிகா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஓசியானியா ஆகிய நாடுகளுக்கான பயணத்தை 3 நாட்கள் 1 மணி 5 நிமிடம் 4 வினாடிகளில் முடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
டாக்டர் அலி இரானி , சுஜோய் குமார் மித்ரா ஆகிய இரு பயணிகளும் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 4 -ஆம் தேதி அன்று அண்டார்டிகாவில் தங்களது சாதனைப் பயணத்தை தொடங்கி, 2022-ஆம் ஆண்டு, டிசம்பர் 7 -ஆம் தேதி அன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் முடித்தனர்.
சுஜோய் மற்றும் டாக்டர் அலி இருவரும் பயணம் செய்வதை விரும்புகிறவர்கள் மட்டுமின்றி, அவர்கள் எந்த ஒரு சாதனையும் முறியடிக்கப்பட வேண்டும் என்று நம்புகிறவர்களும் கூட. அந்த வகையில் இன்று நாம் ஒரு சாதனையை முறியடிப்பதில் வெற்றி பெறலாம். ஆனால் நாளை வேறொருவர் நம் சாதனையை முறியடிப்பார்கள் என்று இருவரும் சாதனைக்கு பின் கூறியதாக இந்நிகழ்ச்சியை வழி நடத்திய நிறுவனத்தால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சாதனை குறித்து பல இந்தியர்களும் தங்களது சந்தோஷத்தை அவர்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் நிலையில் “அர்ப்பணிப்புள்ள அந்த முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்” எனவும் , “2023 இன் சிறந்த செய்தி” இது எனவும் அவர்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் சாதனை படைத்த இருவரில் ஒருவர் பிசியோதெரபி துறையில் நன்கு அறியப்பட்ட பெயர் கொண்ட டாக்டர் இரானி எனவும், இவர் இந்திய கிரிக்கெட் அணியுடன் இணைந்து நீண்ட காலமாக பிசியோதெரபிஸ்ட்டாக பணியாற்றி வந்ததாக தகவல் வெளிவந்துள்ளது .
இதற்கு முன்பு ஏழு கண்டங்களில் அதிவேகப் பயணம் செய்ததற்கான சாதனை ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த டாக்டர் கவ்லா அல் ரொமைதி என்பவரால் நிகழ்த்தப்பட்டது எனவும். அவர் 3 நாட்கள் 14 மணி 46 நிமிடம் 48 வினாடிகளில் அந்த சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.










