`
இந்தியன் 2 படத்தை விரைவாக முடிக்காததற்கு லைகா நிறுவனம்தான் காரணம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் ஷங்கர் பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர் நடிகர் கமலை வைத்து இந்தியன் 2 படம் இயக்கிவருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தை நிறைவு செய்யாமல், மற்ற திரைப்படங்களை இயக்க ஷங்கருக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று லைக்கா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் தரப்பில் இன்று பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் படத்தை தயாரிக்க ரூ 270 கோடி செலவாகும் என்று தான் தெரிவித்தபோது, அதை லைகா நிறுவனம் ரூ. 250 கோடியாகக் குறைத்தது. இதற்கு நான் உடன் பட்டபோதும், நிதி ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டது. தில்ராஜா என்பவர்தான் இந்த படத்தைத் தயாரிக்க இருந்தார் என்றும் அவரிடம் சமாதானம் பேசியே இந்த படத்தை லைகா வாங்கியது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நடிகர் கமலுக்கு மேக் ஆப் அலர்ஜி ஏற்பட்டதற்குத் தான் காரணம் இல்லை அதனால் படம் தள்ளிப்போனதற்குத் தான் பொறுப்பேற்க முடியாது என்றும் அவர் கூறினார்.
மேலும் கொரோனா ஊரடங்கு மற்றும் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டதாலும் படம் தள்ளிப்போனது என்றும் அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணையை ஜூன் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.







