ஸ்ரீநகரிலிருந்து ஷார்ஜாவுக்கு செல்ல பாகிஸ்தானின் வான் பரப்பில் அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரிலிருந்து ஐக்கிய அரபு அமீரகமான ஷார்ஜாவுக்கு நேரடி விமான சேவை கடந்த அக்.23ம் தேதி தொடங்கப்பட்டது. கோ-ஏர் என்று அழைக்கப்படும் கோ-பர்ஸ்ட் விமான சேவை நிறுவனம் இந்த நேரடி சேவையை தொடங்கியது. இதன் மூலம் இடை நிறுத்தல்கள் இன்றி நேரடியாக ஸ்ரீநகரிலிருந்து ஷார்ஜாவுக்கு செல்ல முடியும்.
இந்த சேவையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாக தொடங்கி வைத்தார். கடந்த செவ்வாய் கிழமை(நவ.2) வரை சிக்கலின்றி இந்த சேவை பாகிஸ்தான் அறிவிப்பால் சிக்கலுக்கு உள்ளானது. தனது வான் பரப்பு வழியே இந்த விமான சேவை தொடரக்கூடாது என பாகிஸ்தான் திடீர் தடை விதித்தது.
இதன் காரணமாக விமானங்கள் ஸ்ரீநகரிலிருந்து குஜராத் வழியாக ஷார்ஜாவுக்கு செல்ல வேண்டிய சூழலுக்கு ஆளானது. இதன் காரணமாக பயண நேரத்தில் 40 நிமிடங்கள் கூடுதலாக செலவாகும். அதற்காக எரிபொருளும் கூடுதலாக செலவாகும். இதனால் பயண கட்டணம் உயரும் அபயாம் ஏற்படும். மட்டுமல்லாது இந்த பாதையில் இடை நிறுத்தங்களும் உண்டு.
எனவே இந்த சிக்கல்களை தவிர்க்க பாகிஸ்தான் அரசு தனது வான் பரப்பினை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என இந்திய அரசு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் இது குறித்து தற்போது வரை கோ-பர்ஸ்ட் விமான சேவை நிறுவனத்திடமிருந்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








