புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி டிஜிட்டல் வங்கி அலகுகளில் இந்தியா சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75வது சுதந்திரத்தையொட்டி 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை அவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் காணொளி மூலமாக பங்கேற்றனர்.
டிஜிட்டல் வங்கி சேவையை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசுகையில், டிஜிட்டல் வங்கி அலகுகள், வங்கித்துறையில் அரசு இரு வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது. ஒன்று வங்கிகளின் நிலையை வலுப்படுத்தி அதில் ஒளிவுமறைவற்ற தன்மையை உருவாக்குவது. மற்றொன்று நாட்டின் குடிமக்கள் அனைவருக்கு வங்கிசேவைகளை கொண்டு சேர்ப்பதாகும்.
அதன்படி இன்று, இந்த 75 டிஜிட்டல் வங்கி அலகுகள் தொடங்கப்பட்டுள்ளன. சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிமையாக்கி உள்ளதாக தெரிவித்தார். வங்கிகளே ஏழைகளின் வீட்டு வாசலுக்குச் செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்தியாவின் டிஜிட்டல் வங்கி உள்கட்டமைப்பை ஐஎம்எஃப் பாராட்டியதாக கூறினார்.
மேலும், டிஜிட்டல் வங்கி அலகுகளில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, அதனை நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்றி சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.







