INDIA – கூட்டணி கட்சியினர் கூட்டம் நாளை நடைபெறுகிறது! நாடாளுமன்றத்துக்கு கருப்பு உடை அணிந்து வரவும் முடிவு!!

மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க வலியுறுத்தும் விதமாக எதிர்கட்சியினர் கருப்பு உடை அணிந்து நாளை நாடாளுமன்ற வர முடிவெடுத்துள்ளனர்.  மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகள் தொடர்பாக பிரதமர்…

மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க வலியுறுத்தும் விதமாக எதிர்கட்சியினர் கருப்பு உடை அணிந்து நாளை நாடாளுமன்ற வர முடிவெடுத்துள்ளனர். 

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த கருத்தை வலியுறுத்தி தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதால்  நாடாளுமன்றம் முற்றிலும் முடங்கியுள்ளது. அதோடு ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் எதிர்கட்சிகள் கொண்டு வந்துள்ளன. எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் ஓம் பிர்லா அனைத்து கட்சிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக நாளை எதிர்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து வர வேண்டும் என எதிர்கட்சிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதோடு INDIA கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்தும், மணிப்பூர் விவகாரம் குறித்தும் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.