திமுக ஆட்சியை எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சியை எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது என்று திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். டெல்டா மண்டல திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி மாவட்டம் ராம்ஜி…

திமுக ஆட்சியை எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது என்று திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

டெல்டா மண்டல திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் பகுதியில் நடைபெற்றது. இந்த பயிற்சி பாசறை கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த சுமார் 12,645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் உள்பட திமுகவினர் பல்லாயிரம் பேர் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு மேற்பார்வையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துறைமுருகன், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மற்றும் பல அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் ஜனநாயகம் புதைக்கப்படும் என்றும் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது எனவும் கூறினார். மாநிலங்களில் பல்வேறு மொழி, பல்வேறு கலாச்சாரத்திற்கு எதிரான கட்சி தான் பா.ஜ.க என தெரிவித்தார்.

வட மாநிலங்களில் எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிடுவதாக குற்றச்சாட்டிய முதலமைச்சர், இதனால் தமிழ்நாடு, கேரளா பாதிக்கப்படும் என தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியை பக்கத்தில் வைத்து கொண்டு ஊழலை பற்றி பிரதமர் பேசுவதாக தெரிவித்த அவர், மணிப்பூர் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அமைதிக்காப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். இந்த தேர்தலில் பாஜகவை முழுமையாக தோற்கடிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். இந்தியாவை காப்பாற்ற இந்தியா கூட்டணியால் தான் முடியும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.