“தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியே வெல்லும்” – தமிமுன் அன்சாரி பேட்டி!

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியே வெல்லும் என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி…

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியே வெல்லும் என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது.  அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும்,  புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.  அதே போன்று அரசியல் கட்சி தலைவர்கள்,  வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.  இந்த நிலையில்,  மனிதநேய ஜனநாயக கட்சி தலைவரும்,  முன்னாள் எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி நாகை மாவட்டம் தோப்புத்துறையில்,  அவர் படித்த பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிக்கு குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.

இதனைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“2600 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கம் ஜனநாயக தேர்தல் முறையை உலகிற்கு அறிமுகம் செய்தது.  9 ஆம் நூற்றாண்டில் சோழர் ஆட்சி இந்தியாவுக்கு ஜனநாயக தேர்தல் முறையை அறிமுகம் செய்தது.  பல கட்டங்களை தாண்டி இன்று ஜனநாயக தேர்தல் முறை வளர்ச்சியடைந்துள்ளது.  இப்போது பெண்கள் வரிசையில் நின்று வாக்களிக்கிறார்கள்.

சாமனியர்களும்,  பாமரர்களும் ஆர்வத்துடன் வாக்களிக்கிறார்கள்.  கிராமங்களில் ஆர்வமுடன் வாக்களிப்பதை அறிய முடிகிறது.  இதே போல் படித்த மேல்தட்டு வர்க்கமும் வாக்களிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்.  இது நம் ஜனநாயக கடமை.  இந்த தேர்தலில் நாடு முழுக்க ஆட்சி மாற்றத்திற்கான அலை வீசுகிறது.  தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியே வெல்லும்.”

இவ்வாறு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.