சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியன் தாத்தா தோற்றத்தில் இருக்கும் கமல் புகைப்படத்தைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து கடந்த 1996-ம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் இந்தியன். படம் வெளியான அந்த சமயத்திலேயே சூப்பர் ஹிட் ஆனது. இந்த நிலையில், 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
இந்தியன் படத்தின் முதல் பக்கத்த்தினை இயக்குநர் ஷங்கர் இயக்கி இருந்த நிலையில், 2-ம் பாகத்தினையும் அவரே உலக நாயகன் கமல்ஹாசனை வைத்தே ஆரம்பித்தார். படப்பிடிப்பு தொடங்கிய சிறிது நாட்களிலேயே விபத்து உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு பாதியில் நின்றது. பின்னர் கமல் நடித்து வெளிவந்த ‘விக்ரம்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியைப் தொடர்ந்து ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது.
லைகா மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாகவும், அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ரூ.200 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் உண்மையானால் இதுவே, ஓடிடிக்கு அதிக தொகைக்கு விற்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படமாக இருக்கும்.
https://twitter.com/shankarshanmugh/status/1691399511984254976?s=20
இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று இப்படத்தின் ‘சேனாதிபதி’ அதாவது இந்தியன் தாத்தா தோற்றத்தில் இருக்கும் கமல் புகைப்படத்தைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படத்துடன் சுதந்திர தின வாழ்த்தையும் படக்குழு தெரிவித்துள்ளது.








