மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரிலேயே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா புதிய சாதனை படைக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
சமீபத்தில் இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்றுமுதல் துவங்கி நடைபெறும்.
ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியை இறுதி செய்வதற்குரிய பரிசோதனைக் களமாக இந்தத் தொடரை இந்திய அணி நிர்வாகம் கையாளும் என்பதில் சந்தேகம் இல்லை. டெஸ்ட் தொடரைப் போலவே இதிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தொடருக்கான இந்திய அணியிலிருந்து முகமது சிராஜிற்கு ஓய்வு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பும்ரா ஏற்கனவே தொடர்ந்து விளையாடியதால்தான், காயம் காரணமாக கிட்டதட்ட ஓராண்டு விளையாடவில்லை. தற்போது, பும்ரா காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் பயிற்சியைத் துவங்கிவிட்டார். அடுத்து, அயர்லாந்து தொடரில் அவர் பங்கேற்பார் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில், விராட் கோலி இன்று நடைபெறும் முதல் போட்டியில் ஒருவேளை 102 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் சச்சின் டெண்டுல்கர், குமார் சங்ககரா மற்று ரிக்கி பண்டிங் ஆகியோர் வரிசையில் ஒரு நாள் தொடரில் 13,000 ரன்களை கடந்த 4-வது வீரர் என்ற சாதனையை படைக்க வாய்புள்ளது.
இதேபோல், கேப்டன் ரோகித் சர்மா ஒருவேளை 175 ரன்கள் குவித்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எட்டுவார். இதன்மூலம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரிலேயே இருவரும் புதிய சாதனை படைக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.







