மின்சார வாகனங்களுக்கு மாறிவரும் டெல்லி மக்கள்; எலக்ட்ரீக் வாகனங்களுக்கு அதிகரிக்கும் மவுசு

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குப் போட்டியாக மின்சார வாகனங்களின் பயன்பாடு தலைநகர் டெல்லியில் அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், மக்கள் மின்சார வாகனங்களை நோக்கி படை எடுக்க…

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குப் போட்டியாக மின்சார வாகனங்களின் பயன்பாடு தலைநகர் டெல்லியில் அதிகரித்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், மக்கள் மின்சார வாகனங்களை நோக்கி படை எடுக்க தொடங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக டெல்லி மக்கள் தற்போது அதிகளவில் மின்சார வாகனங்களை வாங்கி வருகின்றனர்.

கியாஸ் உள்ளிட்ட வாகனங்களை பதிவு செய்வதை விட மின்சார வாகனங்கள் பதிவு அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூலை முதல் செப்டம்பர் வரை டெல்லியில் 1 லட்சத்தி 50 ஆயிரம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 7869 மின்சார வாகனங்களும், 6857 சிஎன்ஜி வாகனங்களும், 7257 சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டிலும் இயங்க கூடியது வாகனங்கள் மற்றும் பெட்ரோல், டீசலில் இயங்க கூடிய 93031 வாகனங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் மின்சார வாகன கொள்கையானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின் மொத்த வாகன பதிவுகளின் எண்ணிக்கையில் மின்சார வாகனங்களின் பங்கு 1 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு பதிவு செய்யப்பட்டு இயக்கப்படும் வாகனங்களில் பெரும்பாலான வாகனங்கள் ஆட்டோ ரீக் ஷாக்கள் மற்றும் டூவீலராகவே உள்ளது.

மின்சார வாகனங்களின் தலைநகராக டெல்லியை மாற்றுவோம் என டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஸ் கெலாட் தெரிவித்துள்ளார். மாசுபாட்டால் ஒவ்வொரு ஆண்டும் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில் வாகன பயன்பாட்டில் டெல்லியில் நிகழும் இந்த மாற்றம் சுற்றுச்சுழல் பாதுக்காப்பிற்கான ஒரு முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.