அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – கடந்த 24 மணி நேரத்தில் 656 பேருக்கு தொற்று உறுதி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 656 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா மீண்டும் பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே வருகிறது.…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 656 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா மீண்டும் பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 656 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 752 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் தகவலின்படி, நாட்டில் தொற்றின் அதிகரிப்பு 3742 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவானதாக இருந்தாலும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்து வருகிறது.

மேலும் தற்போதைய ஆய்வுகளின்படி, ஜெஎன்.1ல் ஆபத்து குறைவாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை ஜெஎன்.1 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22ஆக பதிவாகியுள்ளது. இதில் 19 பேர் கோவாவை சேர்ந்தவர்கள் ஆவர். ஜெஎன்.1 வகை தொற்றால் அச்சமடைய தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.