மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை முனியப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் பருவமழை…

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை முனியப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைகளில் இருந்து அதிக அளவில் உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.  இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் முழு கொள்ளளவான 120 அடியை மேட்டூர் அணை எட்டியது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து 1.75 லட்சத்துக்கும் மேல் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஈரோடு மாவட்ட காவேரிக் கரை முனியப்பன் கோயில் பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். கருங்கல்பாளையம் காவல் ஆய்வாளர் ராஜ பிரபு தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 1,85,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,10,000 கன அடி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்பட உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,85,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், கால்வாய் பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

அணையின் நீர்மட்டம் 120.13 அடியாகவும், நீர் இருப்பு 93.67 டிஎம்சியாகவும் உள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை தொடர்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சுமார் 1,90,000 கன அடி முதல் 2,10,000 கன வரை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீர்த்திறப்பு எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கப்படும் என்பதால் கரையோரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்வளத் துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.