ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.95 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.95 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.  கர்நாடகா, கேரளா காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கர்நாடக அணைகளான…

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.95 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. 

கர்நாடகா, கேரளா காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த இரு அணைகளில் இருந்தும் தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், ஒக்கேனக்கலுக்கு நேற்று காலை 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வந்தது. நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருவதால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கலில் உள்ள அனைத்து அருவிகளும் மூழ்கியுள்ளது. போலீஸார், தீயணைப்புப் படையினர், வருவாய்த் துறையினர் ஒகேனக்கல் காவிரி கரையோரப் பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை நிலவரப்படி ஒரு லட்சத்து 85 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போதைய நிலவரப்படி ஒரு லட்சத்து 95 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், தொடர்ந்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,  ஆற்றில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் 27வது நாளாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தடை விதித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.