அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு சென்னை வானகரத்தில் வருகிற 15-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் கடந்த ஜீன் 11-ம் தேதி பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையை அடுத்துள்ள வானகரத்தில் நடைபெற்றது. இதில் ஒற்றை தலைமை வேண்டும் என பெரும்பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தியதையடுத்து, அதிமுக-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேநேரத்தில், அதிமுக கட்சியின் தலைமை அலுவலகமான ராயப்பேட்டை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்து முக்கியமான கோப்புகளை எடுத்து சென்றதாக புகார் எழுந்தது. மேலும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததோடு, தலைமை அலுவலகம் சீல் வைக்கும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 15-ம் தேதி சென்னை வானகரத்தில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமமுக கட்சியின் துணைத்தலைவருமான அன்பழகன் தலைமையில், 15-ம் தேதி காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்பதால், அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே, அதிமுக கூட்டம் நடைபெற்ற அதே மண்டபத்தில் அமமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
– இரா.நம்பிராஜன்