வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை தான் உயர்த்தப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் சில்லறை விற்பனை விலையை, லிட்டருக்கு 12 ரூபாய் அதிகரித்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியிருப்பதால் ஏற்படும் செலவினத்தை ஈடு செய்ய விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், பால் விலை உயர்வு குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர், வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் ஆவின் ஆரஞ்ச் நிற பால் பாக்கெட்டின் விலைதான் உயர்த்தப்பட்டுள்ளது என்றார். ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் வாங்கும் 11 லட்சம் பேரில் 60 சதவீதம் பேர், வணிக ரீதியில் வாங்குகின்றனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேநேரத்தில் அட்டை மூலமாக வாங்குபவர்களுக்கு 46 ரூபாய் என்ற பழைய விலையில் ஆரஞ்ச் நிற பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார். மற்ற தனியார் நிறுவனங்களை விட, ஆவின் நிறுவனம் 10 ரூபாய் குறைவாக விற்பனை செய்வதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.