நடிகர் வடிவேலு முதன் முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
ராஜ்கிரண் நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலக்கு வடிவேலு அறிமுகமானார். அதன்பிறகு காமெடியில் தனக்கென தனி பாணியை உருவாக்கி எண்ணற்ற திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 10 ஆண்டுகளில் ஒரு சில திரைப்படங்களிலேயே நடித்திருந்தார்.
தற்போது மீண்டும் நடிப்பில் பிசியாகியுள்ளார் வடிவேலு. சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் அதே சமயம், மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். 35 வருடங்களுக்கும் மேலாக, தமிழ் திரையுலகில் பயணித்து வரும் நடிகர் வடிவேலு, இதுவரை நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் நடித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய ராம்பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்க்கு வில்லனாக, வடிவேலு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தில்லுக்கு துட்டு காமெடி பாணியில் உருவாகி இருந்தது. அதுபோலவே இத்திரைப்படமும் காமெடி பாணியில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வடிவேலு நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது.







