தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப் பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில், மேயர், துணை மேயருக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. .
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் 12 ஆயிரத்து 838 வார்டு கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாநகராட்சிகளுக்கு ஆயிரத்து 370 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
4 வார்டுகளில் போட்டி இல்லாமல் கவுன்சிலர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.இதேபோல நகராட்சி வார்டுகளில் 3 ஆயிரத்து 825 கவுன்சிலர்கள் தேர்வான நிலையில் 18 வார்டுகளில் போட்டி இல்லாமல் தேர்வு செய்யப்பட்டனர்.
பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 7,621 பதவிகளுக்கு 196 இடங்களுக்கு போட்டியின்றி கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்களுக்கு ஆணையர்களும், பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர்களும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து மேயர், துணை மேயருக்கான மறைமுகத் தேர்தல் நாளை நடைபெறுகிறது.








