வடிவேலுவின் மாயக்குரலில் ’மலையிலதான் தீப்பிடிக்குது’!!

2 நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ராசாகண்ணு பாடல் இன்று வெளியாகி இருக்கிறது…. அடுத்தமாதம் வெளியாகும் மாரி செல்வராஜின் ’மாமன்னன்’ ரிலீசுக்காக ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். வடிவேலு, உதயநிதி, ஃபகத் ஃபாசில், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியே எதிர்பார்ப்பை…

2 நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ராசாகண்ணு பாடல் இன்று வெளியாகி இருக்கிறது….

அடுத்தமாதம் வெளியாகும் மாரி செல்வராஜின் ’மாமன்னன்’ ரிலீசுக்காக ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். வடிவேலு, உதயநிதி, ஃபகத் ஃபாசில், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியே எதிர்பார்ப்பை எகிற வைத்த நிலையில், படத்தின் ஃபஸ்ட்லுக்கில் வடிவேலுவின் டெரர் லுக் இன்னும் ஹைப்பை அதிகப்படுத்தியது. அந்த டெரர் லுக் தொடர்பான நியூஸ்7 தமிழின் கட்டுரை : https://news7tamil.live/intimidate-father-in-law-vadivelu.html

இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாமன்னன் படக்குழுவினர் திட்டமிட்டு ரசிகர்களின் நாடித்துடிப்பை பதம் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாரி செல்வராஜ் சமூக வலைதளங்களில் இட்ட பதிவு தீயாய் பரவியது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வடிவேலு குரலில் முதல் சிங்கிள் வெளியாகும் என்கிற அறிவிப்பு தான் அது. அடுத்ததாக ஏ.ஆர்.ரஹ்மானும் அந்த தகவலை தன் பங்கிற்கு பரவவிட்டார். அன்றைய தினம் ட்ரெண்டிங் அடித்த அந்த பதிவிற்கு பாதகமில்லாமல் ஒரு அருமையான பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.

மாரி செல்வராஜின் படத்தில் இப்படி ஒரு பாடல் என்பது வழக்கமானது. ஏ.ஆர். ரஹ்மானும் இதுபோன்ற இசையை ஏற்கனவே கொடுத்தவர்தான். ஆனால் வடிவேலு??  வடிவேலு பாடிய பாடல்களில் துள்ளல் இருக்கும். நக்கல், நையாண்டிகளுக்கு பஞ்சமிருக்காது.

“பசித்த மீனைத் தின்றவர்களின் வயிற்றில்
அலையடிக்கிறது கடல்.”

இயக்குநர் மாரி செல்வராஜின் இந்த டைட்டிலோடு தொடங்கும் பாடலில் கருப்பு வெள்ளை காட்சிகள் விரிய, தந்தானத்தானா என வடிவேலு தொடங்கும் போதே ஒரு வைப் பற்றிக்கொள்கிறது.

உண்மையில் வடிவேலு மலையில தான் தீப்பற்ற வைத்திருக்கிறார் இந்த பாடலில்…. அவருடைய மாடுலேசன் இந்த பாடலுக்காக அவர் எவ்வளவு உழைத்திருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. வடிவேலுவின் நடிப்புக்கு மாரிசெல்வராஜ் இந்தப் படம் மூலம் வேறு தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார் என்றால், ஏ.ஆர்.ரஹ்மான் அவரது குரலுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டார் போல..

இந்தப்படமும், பாடலும் வடிவேலுவின் கம் பேக்கிற்கு கட்டியம் கூறுகின்றன.. வாருங்கள் வடிவேலு… காத்திருக்கிறோம்….

இன்னொரு செய்தி: வடிவேலு ஏற்கனவே சேரன் இயக்கத்தில் வெளியான பொற்காலம் படத்தில் தேவா இசையில் ஒரு சோகப்பாடல் பாடியுள்ளார். அதுவும் பெரும் வரவேற்பு பெற்ற பாடல் தான் என்றாலும், ராசாக்கண்ணு பாடலில் இழையோடும் அந்த சோகம் இதுவே முதல்முறை….

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.