ராஜஸ்தான் அருகே திருமண வீட்டார் சென்ற கார் நிலை தடுமாறி ஆற்றில் கவிழ்ந்ததில் மணமகன் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் பர்வரா பகுதியில் இருந்து உஜ்ஜைனில் நடைபெற இருந்த திருமணத்திற்காக, மணமகனின் குடும்பத்தார் 9 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கோட்டா பகுதியில் சென்று கொண்டிருந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சம்பல் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், காலை 7.50 மணியளவில் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து மீட்பு பணி தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில், ஏழு-எட்டு அடி ஆழத்தில் தண்ணீரில் மூழ்கியிருந்த காரில் இருந்து ஏழு உடல்கள் வெளியே எடுக்கப்பட்டன. பின்னர் மேலும் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டது.
தூக்கம் காரணமாக ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் மணமகன் உட்பட 9 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார், சடலங்களைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்திற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் அமைச்சர் சாந்தி தரிவால் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது ”மாப்பிள்ளை உட்பட 9 பேரை ஏற்றிச் சென்ற கார் சம்பல் ஆற்றில் விழுந்ததில் உயிரிழந்தது மிகவும் வருத்தமும், துரதிர்ஷ்டமும் அளிக்கிறது. அம்மாவட்ட ஆட்சியரிடம் பேசி நிலைமையை அறிந்து கொண்டேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்”என்று ட்வீட் செய்துள்ளார்.








