புதுச்சேரியில் பாதாள சாக்கடையில் இருந்து விஷ வாயு வெளியேறியதால் மக்கள் அச்சம்!

புதுச்சேரி, கம்பன் நகர் பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து விஷ வாயு வெளியேறியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு வெளியே ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.  புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் தொகுதிக்குட்பட்ட புது நகர் பகுதியில் ஜூன் 11-ஆம்…

புதுச்சேரி, கம்பன் நகர் பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து விஷ வாயு வெளியேறியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு வெளியே ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் தொகுதிக்குட்பட்ட புது நகர் பகுதியில் ஜூன்
11-ஆம் தேதியன்று கழிவறையில் விஷவாயு தாக்கி 15 வயது சிறுமி உட்பட 3 பெண்கள்
உயிரிழந்தனர். இந்நிலையில் விஷவாயு தாக்கிய புதுநகர் அருகே உள்ள கம்பன் நகர் மற்றும் செல்லம்பாப்பு நகர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் நேற்று இரவு கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளனர்.

உடனடியாக காவல்துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் வீதிகளில் உள்ள பாதாள சாக்கடையினை திறந்து எதனால் வாயு வெளியேறியது என ஆய்வு மேற்கொண்டனர். வெயிலின் தாக்கம் காரணமாக பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பினால் வாயு உருவாகி, அது வெளியேறி துர்நாற்றம் வீசியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் அனைவரும் சமாதானம் அடைந்து வீடு திரும்பினர்.

இதனிடையே பொதுமக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் குவிந்ததால் அப்பகுதி முழுவதும் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.