மத்திய பிரதேசத்தில் மகளிர் உதவித்தொதை ரூ.1250 ஆக உயர்த்தப்படும் என்றும், ரூ.450-க்கு எரிவாயு சிலிண்டர் வழஙகப்படும் என அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் சுமார் 18 ஆண்டுகளான பாஜக ஆட்சியில் உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது.
“பெண்களின் சமூக பொருளாதார மேம்பாட்டை கருத்தில் கொண்டு கடந்த மாதம் முதல் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகை 1250 ரூபாயாக உயர்த்தப்படும். அடுத்தகட்டமாக இதைச் சிறிது சிறிதாக உயா்த்தி பெண்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும்.
சமையல் கேஸ் சிலிண்டா்ரூ.450-க்கு வழங்கப்படும். முதல் கட்டமாக, இப்போது நடந்து வரும் புனித மாதமான ஷ்ரவண மாதத்தில் ரூ.450-க்கு சிலிண்டா் வழங்கப்படும். அடுத்த கட்டமாக இத்திட்டத்தை நிரந்தரமாக செயல்படுத்த திட்டம் வகுக்கப்படும்.
அரசுப் பணிகளில் பெண்களுக்கு உள்ள 30 சதவீத இடஒதுக்கீடு 35 சதவீதமாக அதிகரிக்கப்படும். அதுவே ஆசிரியா் பணியிடங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 50 சதவீதமாக இருக்கும்” என சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.
இதனிடையே 18 ஆண்டுகாலம் ஆட்சியில் உள்ள பாஜக ஏமாற்று தந்திரங்கள் மூலம் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக முயல்வதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத் குற்றம்சாட்டியுள்ளர்.







