கேரள மாநிலத்தின் தலைமைச் செயலாளராக தனது கணவரைத் தொடர்ந்து சாரதா முரளிதரன் ஐஏஎஸ் பதவியேற்றார்.
கேரள மாநில தலைமைச் செயலாளராக நேற்றுவரை பணியாற்றியவர்தான் டாக்டர் வி.வேணு. இவரது பதவிக்காலம் ஆக.31ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதனிடையே அடுத்த தலைமைச் செயலாளராக யாரை நியமிக்கலாம் என கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது சாரதா முரளிதரனை அடுத்த தலைமைச் செயலாளராக நியமிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. தலைமைச் செயலாளராக இருந்த வி.வேணுவின் மனைவிதான் சாரதா முரளிதரன்.
இந்நிலையில் இன்று சாரதா முரளிதரன் தலைமைச் செயலாளராக பதவியேற்றார். பதவியேற்ற மாநில தலைமைச் செயலாளரான சாராதா முரளிதரணுக்கு அவரது கணவரும், முன்னாள் தலைமைச் செயலாளருமான வேணு வாழ்த்து தெரிவித்தார்.
கேரளாவில் பல்வேறு அரசு ஊழியர்கள் தம்பதிகளாக இருந்தாலும், மாவட்ட ஆட்சியர்களாக பணிபுரிந்து, கணவருக்கு பிறகு மனைவி தலைமைச் செயலாளராக பதவியேற்பது இதுவே முதல் முறை என முதலமைச்சர் பினராயி விஜயன் பெருமிதம் அடைந்தார். இந்தியாவில் கணவனுக்கு பின் மனைவி தலைமைச் செயலாளராக பதவியேற்பது இது மூன்றாவது முறையாகும்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இது போன்று முதல் முறையாக நடந்தது. அந்த மாநில தலைமை செயலாளராக பதவி வகித்த மனோஜ் சவுனிக் கடந்த டிசம்பரில் ஓய்வு பெற்ற நிலையில், அவரது மனைவி சுஜாதா இந்தாண்டு ஜூன் மாதம் தலைமை செயலாளராக பொறுப்பேற்றார். அடுத்தபடியாக, கர்நாடகாவில் ரஜ்னீஷ் கோயலை தொடர்ந்து அவரது மனைவி ஷாலினி ரஜ்னீஷ் தலைமை செயலாளராக பொறுப்பேற்றார். மூன்றாவது மாநிலமாக, கேரளாவிலும் இது நடந்துள்ளது.
யார் இந்த சாரதா முரளிதரன்?
1990ல் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர் 2006-2012ம் ஆண்டு குடும்பஸ்ரீ திட்டத்தின் தலைமை அதிகாரியாக இருந்து, தனது திறமையை வெளிப்படுத்தினார். அதேபோல, மத்திய அரசின்தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தலைமை அதிகாரியாகவும் இருந்தார். பஞ்சாயத்து ராஜ் துறையின் இணை செயலாளராக இருந்து கிராமப் பஞ்சாயத்து திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்றார். அதுமட்டுமில்லாமல், பட்டியலின மக்களின் வளர்ச்சி துறைக்கான இயக்குநர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார். நேற்றுவரை கேரள அரசின் உள்ளாட்சி துறையின் கூடுதல் தலைமை செயலாளராக இருந்தவர் இன்று தலைமைச் செயலாளராக பணியேற்றார்.







